தற்போதைய செய்திகள்

சுஜித்தை மீட்க பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களை குறை கூற வேண்டாம் – வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

சென்னை, அக். 31-

குழந்தை சுஜித்தை மீட்க அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களை குறைகூற வேண்டாம் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் குமரி முனை, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது மாலத்தீவு, குமரி முனை பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மாலத்தீவின் கிழக்கு வடகிழக்கில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், லட்சத்தீவின் கிழக்கு தென்கிழக்கில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வுமையத்துடன் நேரடி தொடர்பிலிருந்து நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவும், ஒரு சில இடங்களில் கன மழை
பெய்யவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குமரி முனை, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குமரி முனை, மாலத்தீவு, லட்சத்தீவு, கேரளா மற்றும் தென் கர்நாடக கடற்கரைப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகுகளில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 7 படகுகள் மற்றும் தூத்துக்குடி
மாவட்டத்திலிருந்து சென்ற 5 படகுகளை தவிர அனைத்து படகுகளும் கரைக்கு திரும்பியுள்ளன. மேற்சொன்ன 12 படகுகளில், 4 படகுகளில் உள்ள மீனவர்களுக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு அவர்கள் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், எஞ்சிய 8 படகுகளில்
(கன்னியாகுமரியிலிருந்து சென்றவை) உள்ள மீனவர்களுக்கு மத்திய அரசின் உள்துறை மூலம் தகவல் தெரிவிக்கவும், கப்பற்படை, கடலோர காவல்படை மற்றும் பிற வணிக கப்பல்கள் மூலம் தகவல் தெரிவித்து இவர்கள் பத்திரமாக கரை திரும்ப அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.அனைத்து பகுதிகளில் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்
தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். குறிப்பாக கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக உங்கள் பகுதியை முழுமையாக கண்காணித்து எந்த எந்த பகுதியில் பாதிப்பு உள்ளது என்ற தகவலை சேகரித்து மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

குழந்தை சுஜித் இறந்த விவகாரத்தில் தொடர்ந்து நாங்கள் தெளிவான தகவல்களை அளித்து வருகிறோம். இறந்தவர்களை எப்படி எடுக்க வேண்டும் என்ற வழிமுறையின் அடிப்படையில்தான் குழந்தை உடல் எடுக்கப்பட்டது. குழந்தையை மீட்க 600-க்கும் மேற்பட்டவர்கள் களத்தில் இருந்தார்கள். இந்த சம்பவத்தை பார்ப்பவர்களை காட்டிலும் அவர்கள் களத்தில் எவ்வளவு வேதனையோடு பணி செய்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். களப்பணியாளர்கள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நொடியும் எப்படியாவது குழந்தையை மீட்கவேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டார்கள். அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். துரதிருஷ்டவசமாக சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை. குழந்தையை பாதுகாக்க அனைத்து தரப்பு முயற்சி தேவை. இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதலை அளித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. போர்வெல் என்பது ஒரு விபத்துதான். பேரிடரல்ல. இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடக்காத வகையில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மனிதனால் எடுக்க கூடிய அனைத்து முயற்சிகளும் அங்கு எடுக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர் குழு சம்பவ இடத்தில் இருந்தது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டது. மாற்று கருத்து எதுவும் இல்லை. தற்போதைய நிலையில் பயன்படுத்தாத போர்வெல்களை மூடுவதே உடனடி பணியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் காவல்துறை கூடுதல் தலைவர் மகேஸ்குமார் அகர்வால், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி.ஜகந்நாதன், மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தேசிய மீட்பு படை துணை காமண்டர் ஜீதேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.