சிறப்பு செய்திகள்

சுனாமி- பூகம்பமே வந்தாலும் கழகத்தை அசைக்க முடியாது – துணை முதலமைச்சர் முழக்கம்…

திருவண்ணாமலை:-

எம்.ஜி.ஆர்., அம்மா ஆசியுடன் ஒன்றரை கோடி தொண்டர்கள் பாதுகாப்பு அரணாக இருப்பதால் சுனாமி, பூகம்பமே வந்தாலும் கழகத்தை அசைக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து ஆரணி மணிக்கூண்டு அருகில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்துவோம். வேட்பாளர் வெ.ஏழுமலை ஏற்கனவே எம்.பியாக இருந்து பல் நல்ல திட்டங்களை ஆரணி தொகுதிக்கு செயல்படுத்தியுள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணி அடாவடி கூட்டணி. தமிழக மக்களுக்கு எவ்வித பிரயோஜனம் இல்லாத கூட்டணி. பெண்கள் நாட்டின் கண்கள். ஆகையால் பெண் குழந்தைகள் பிறந்தால் நிதியுதவி, திருமண வயதுக்கு வந்த பிறகு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் என பெண்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்கள் வீட்டில் அனைத்து பணிகளையும் செய்வதால் பணிச்சுமையை குறைக்க புரட்சித்தலைவி அம்மா விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் பொங்கல் பரிசாக கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தது. தற்போது நாம் அதனுடன் ரூ.1000 சேர்த்து தருகிறோம். மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்காக 60 லட்சம் பேருக்கு உதவித்தொகையாக ரூ.2ஆயிரம் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க.வினர் உடனடியாக தடையாணையை பெற்றனர். இதனால் பொதுமக்களுக்கு தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் ரூ.2000 வழங்கப்படும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகளில் 9 மத்திய அமைச்சர்கள் இருந்தனர். இவர்களால் தமிழகத்திற்கு என்ன பயன். சேதுசமுத்திர திட்டம் 40 ஆயிரம் கோடி மதிப்பில் கொண்டு வந்தனர். இந்த வீணான திட்டத்தால் 40 ஆயிரம் கோடி என்ன ஆனது. தண்ணீரில் போனதா? அல்லது தி.மு.க.வினரின் வீட்டிற்கு போனதா என்று தெரியவில்லை. காவேரி பிரச்சினைக்காக பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா காவேரி நடுவர் ஆணையத்தை கொண்டு வந்து மத்திய அரசிதழில் இடம் பெற செய்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கழகம் இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். இக்கட்சி எம்.ஜி.ஆர் தலைமையில் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. பல சாதனை, சோதனைகளுக்கிடையே கட்சியை வளர்த்தவர் அம்மா. 1.5 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் கழகத்தை அசைக்க முடியாது. இக்கட்சியில் அம்மாவால் பயிற்சி பெற்றவர்கள் உள்ளோம். ஆகையால் நாம் வெற்றிபெறுவது உறுதி.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முன்னதாக துணைமுதல்வருக்கு ஆரணி எல்லையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், செய்யாறு எம்.எல்.ஏ தூசி கே.மோகன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.