தற்போதைய செய்திகள்

சுற்றுச்சூழலை மேம்படுத்த விரைவில் புதிய திட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்…

ஈரோடு:-

சுற்றுச்சூழலை மேம்படுத்த விரைவில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி கவுந்தப்பாடியில் ரூ 4.28 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை சுற்றுச் சூழல் துறை
அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி முன்னாள் ஊராட்சி தலைவர் பாவாதங்கமணி, உஷா மாரியப்பன், ஊராட்சி செயலாளர் கே.என்.ஆறுமுகம், அம்மா பேரவை செயலாளர் எஸ்.சிவக்குமார், அஷ்ரப் அலி, விஸ்வநாதன், மாதேஸ்வரன், முருகேசன், சரவணன், ஈஞ்சரம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதலமைச்சர் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பவானி தொகுதியை பொறுத்தவரை மைலம்பாடி, பட்லூர் பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பெருந்தலையூரிலிருந்து கவுந்தப்பாடி வரை ரூ4.28 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தயாரிக்கும் 170 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடுகள் படிப்படியாக குறைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.