தற்போதைய செய்திகள்

சூலூர் கழக வேட்பாளர் விபி.கந்தசாமிக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு…

கோவை

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருகூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனைத்தொடர்ந்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

விவசாயிகளால் நடத்தப்படுகின்ற ஒரு முக்கியமான கூட்டம். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த நில உரிமையாளர்களால் நடத்தப்படுகின்ற இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

விமான நிலையம் விரிவாக்கம் என்பது கோவையின் தொழில் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் சர்வதேச விமானங்கள் கோவை வந்தடையும். இதனால் தொழில் வளமும், வேலைவாய்ப்பும் பெருகும்.

இப்பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினை என்னவென்றால் நில எடுப்புக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் நிலத்திற்கான இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராடி வந்தனர். பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில் நில உரிமை பிரச்சினைக்காக போராடி கொண்டுள்ள விவசாயிகளிடையே அரசியலை புகுத்த விரும்பாத நிலையில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. தற்போது நல்ல சூழ்நிலை அமைந்துள்ளது. ஆகவே இந்த பிரச்சினையை முதல்வரிடத்தில் கொண்டு செல்ல முடிந்தது.

கொங்கு நாட்டை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும், நில எடுப்பு இழப்பீடு தொகை பிரச்சனையையும் எளிதில் அவரால் உணர முடிந்தது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் ஒரு விவசாயி என்பதால் இதற்கான தீர்வினை எடுத்து சரியான வகையில் உத்தரவு பிறப்பித்து விவசாயிகளை துயரிலிருந்து காப்பாற்றினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி வந்த நாங்கள் என்றைக்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க காரணமாக இருக்க மாட்டோம். விவசாய குடும்பத்தில் பிறந்த நாங்கள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழக முதல்வரிடம் இந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்துச் சென்று நேரில் பேசினோம்.

பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். விமான நிலைய விரிவாக்கத்துக்கு முதலில் கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகை குறைவாக இருந்தது. கழக அரசின் தீவிர முயற்சியால் தற்போது அதிக தொகை தரப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகளை முறியடித்து விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை பெற்று தந்துள்ளது கழக அரசு.

தமிழக முதல்வர் ஒரு முடிவு எடுத்தால் அதில் சிறிதளவு கூட மாற மாட்டார். தொலைநோக்கு திட்டத்துடன் தமிழகத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இயங்கும் கழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர தமிழக முதல்வர் முழு முயற்சி எடுத்து வருகிறார்.

கொங்கு மண்டல விசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு, தமிழக அரசு 1600 கோடியை ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.குடிமராமத்து திட்டம், விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டம்போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடுக்கு கழக ஆட்சியில் மணிமண்டபம் அமைத்துத் தந்ததை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறோம். இப்பகுதியில் லட்சுமி மில்ஸ் முதல் சின்னியம்பாளையம் வரையிலான மேம்பாலப்பணிகள் விரைவில் துவங்கும்.

உங்களை போன்ற விவசாயியான கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமி சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய கழக வேட்பாளர் வி.பி. கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்திற்கும், விவசாயிகளுக்கும் கழக அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்வில் எட்டிமடை எ.சண்முகம் எம்.எல்.ஏ., முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாரப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், இருகூர் பேரூராட்சி கழக செயலாளர் எம்.கே.எம்.ஆனந்தகுமார், பேரூராட்சி கழக செயலாளர்கள் சண்முகராஜா, வெள்ளளூர் மருதாசலம், முன்னாள் கவுன்சிலர் செந்தில் என்கிற கார்த்திகேயன், சின்னியம்பாளையம் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க செயலாளர் பரமேஸ்வரன், மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.