சிறப்பு செய்திகள்

சூலூர் சட்டமன்ற தொகுதி கழக எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ் மாரடைப்பால் காலமானார் – ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் அஞ்சலி…

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி கழக எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ்  காலை மாரடைப்பால் காலமானார். கழக ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். கனகராஜ் மறைவு அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கண்ணீர் மல்க கூறினார்.

கோவை:-

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி கழக எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ்  காலை சுல்தான்பேட்டை வதம்பச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டதும் கழக தொண்டர்களும், கோவை மாவட்ட கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து கண்ணீர்அஞ்சலி செலுத்தினார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கழக முன்னோடிகள் நேரில் சென்று கனகராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.

சட்டப்பேரவை தலைவர் ப.தனபால், சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, சி.மகேந்திரன் எம்.பி., கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், கஸ்தூரி வாசு ஆகியோரும் கனகராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கனகராஜ் எம்.எல்.ஏ. மறைவு குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:-

காலம் சென்ற கனகராஜ் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கழகத்தில் இருந்து பணியாற்றியவர். சாதாரண உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்து சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர். அனைவரிடத்திலும் அன்போடும், இன்முகத்தோடும் பழகக்கூடிய நல்ல பண்பாளர். கட்சி பேதமின்றி எல்லோரிடத்திலும் இனிமையாக பழகும் தன்மை கொண்டவர். அத்தகைய ஒரு நல்ல செயல்வீரரை, உண்மையான தொண்டரை, விசுவாசமிக்க கழக உறுப்பினரை இழந்து விட்டோம். அவரது மறைவு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கனகராஜ் எம்.எல்.ஏ. மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் மரணமடைந்த சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கனகராஜ் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாவார். ஆரம்ப காலம் முதலே அ.இ.அ.தி.மு.க. உறுப்பினரான இவர் 1986-ம் ஆண்டு சுல்தான்பேட்டை ஒன்றிய கவுன்சிலராகவும், சுல்தான்பேட்டை ஒன்றிய தலைவராக இருமுறையும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும், 2011-ல் கோவை மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். மேலும் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளராகவும், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.

மக்கள் பிரச்சினைகளை முன்னின்று உடனுக்குடன் தீர்த்து வைப்பதிலும், அனைவரிடமும் இனிமையாக பேசி பழகியதாலும் சூலூர் தொகுதியில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்தார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கட்சி நிர்வாகிகள் மற்றும் சூலூர் தொகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த ஆர்.கனகராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ரத்தினம் என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், பாமா விஜயம் என்ற மகளும் உள்ளனர்.