சிறப்பு செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் : பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதலமைச்சர் நன்றி…

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் அண்மையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தாங்கள் உரையாற்றுகையில் எங்களது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழக மக்களின் இதயம் கவர்ந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டப்படும் என்று அறிவித்தீர்கள். தமிழக முதலமைச்சர் ஏற்கனவே தங்களுக்கு இது குறித்து பலமுறை கடிதம் மூலமாகவும், கட்சி மற்றும் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் மூலமாகவும் வலியுறுத்தி இருப்பதை நினைவு கூர விரும்புகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும், பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை அமல்படுத்தி மக்களின் வறுமையை போக்கி அவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருந்த ஒப்பற்ற தலைவர் ஆவார். அத்தகைய ஒரு தலைவரின் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனை ஏற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை நகரின் நுழைவு வாயிலாகவும், நாட்டின் முக்கிய ரயில் நிலையமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு ரயில் நிலையத்திற்கு எங்களின் மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை வைத்திருப்பது சாலப் பொருத்தமாகும். அதற்காக தமிழக மக்களின் சார்பாகவும், அரசு சார்பாகவும், எனது சார்பாகவும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.