தற்போதைய செய்திகள்

சென்னையில் அம்மா ஸ்கூட்டர் பெற முதல்கட்டமாக 1400 பேர் தேர்வு

மானிய விலை ஸ்கூட்டர் பெற சென்னையில் மட்டும் ஆயிரத்து 400 பேர் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாளான வரும் 24-ந் தேதி முதல்-அமைச்சர் முன்னிலையில் வாகனம் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்ட தேர்வு தமிழகத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள கடந்த மாதம் 22-ந் தேதி விண்ணப்ப வினியோகம் தொடங்கி இந்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெற்றது. இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ள பெண்களுக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனால் ஓட்டுநர் உரிமம் பெற பெண்கள் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்தனர். தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.

அதில் முதற்கட்டமாக முறையான ஆவணங்களை தாக்கல் செய்த ஆயிரத்து 400 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.