தற்போதைய செய்திகள்

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்…

சென்னை:

சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் காரணங்களுக்காக  திடீரென சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”இன்று அதிகாலை 3.40 மணியளவில் விமானத்தின் சரக்குகள் இடம்பெறும் பகுதியில் திடீரென புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த விமான பைலட் விமானத்தை அவசர அவசரமாகத் தரையிறக்கினார்.

விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி அனுமதி கேட்டிருந்தார். சென்னையில் உள்ள விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அவருக்கு உடனடியாக அனுமதி வழங்கினர். இச்சம்பவம் நடந்தபோது விமானத்தில் மொத்தம் 161 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது” என்று விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கார்கோ பகுதியில் புகை வந்தததற்கான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு சரிசெய்த பின் இன்று பிற்பகல் மீண்டும் இவ்விமானம் சிங்கப்பூர் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.