தற்போதைய செய்திகள்

சென்னையில் நம்பர் பிளேட்டை படமெடுக்கும் சிசிடிவி கேமராக்கள் – காவல் ஆணையர் இயக்கி வைத்தார்

சென்னை

சென்னையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படமெடுக்கும் சி.சி.டி.வி. கேமராக்களின் செயல்பாட்டை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இயக்கி வைத்தார்.

சென்னை ரன்னர்ஸ் அசோஷியேஷன் சார்பில் ரூ.10 லட்சம் செலவில் சென்னை நந்தனம் சந்திப்பில் 3 சிசிடிவி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் 3 சிசிடிவி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் 3 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 9 ANPR (Automatic Number Plate Recognisation) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நந்தனம் சந்திப்பு அருகே நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு 3 இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்ற சம்பவங்கள் வெகுவாகக் குறைவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த ஐயப்பாடு விலகியுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் (Hit and Run Cases) உள்ளிட்ட வழக்குகளில் 76 சதவீதம் போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ANPR சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து அந்த வாகனம் எந்த நேரத்தில் எந்த சாலையை கடந்துள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் குற்றம் செய்துவிட்டு தப்பித்து செல்ல முயல்பவர்கள் யாராயினும் எளிதில் பிடிக்க முடியும்” என்று கூறினார்.