தற்போதைய செய்திகள்

சென்னையில் ரூ.2000 கோடியில் வாகனங்களை நிறுத்த விரிவான மேலாண்மை திட்டம்…

சென்னை:-

சென்னையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ.2000 கோடியில் விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை அரசு தனியார் பங்களிப்பு முறையின் கீழ் செயல்படுத்த உள்ளது என்று துணை முதலமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை, சுகாதாரக் குறியீடுகள் மற்றும் பாலின சமத்துவம் போன்ற குறியீடுகளில் 100 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சியை அடைவதற்காக, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தில், இந்நிதியத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, ‘சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு’,

2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால், மாநிலங்களுக்கு இடையேயான மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கு குறைந்துள்ள போதும், ‘உதய்’ திட்டத்தையும், ஊதிய உயர்வையும் இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.

2017 2018-ம் ஆண்டில் 9.07 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் வளர்ச்சி, 2018 2019 ஆம் ஆண்டில் 14 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவருவாயில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான மாற்றத்தினால் 2018-2019 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை 19,319 கோடி ரூபாயிலிருந்து 2019-2020-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 14,315 கோடி ரூபாயாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

‘உதய்’ திட்டம் மற்றும் ஊதிய உயர்வு போன்றவை ஏற்படுத்திய தாக்கம் வரும் காலத்தில் குறையும் என்பதாலும், சொந்த வரி வருவாயில் காணப்படும் உயர் வளர்ச்சியாலும், வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறையை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் உள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறையின் கீழ் கிடைக்கப்பெறும் வரி வருவாய்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பெற்றுள்ளது.

எனினும், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் 2017 2018 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாய் அளவிலான பங்கையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் 455.16 கோடி ரூபாய் அளவிலான உறுதிசெய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலுவைத் தொகைகளை விடுவிப்பதில் மத்திய அரசு செய்யும் தாமதம் மாநிலத்தின் நிதிநிலையின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் வருவாய்ச் செலவினங்கள் உயர்ந்து வருவதால், மூலதனச் செலவினங்களையும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் அதிக அளவில் மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே, உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான கருத்துருவாக்கம் முதல் செயலாக்கம் வரை விரைந்து செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தப்பட்டதுடன், இதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகமும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் 3,329 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைப் பணிகள், சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக முறையே 132.76 கோடி ரூபாயும், 21.83 கோடி ரூபாயும் அனுமதித்துள்ளதுடன், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் அதிவேக மக்கள் திரள் போக்குவரத்தையும் சென்னை மெட்ரோ இரயிலையும் ஒருங்கிணைத்தல் போன்ற திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காகவும் நிதி உதவியை அளித்துள்ளது.

சென்னை திறன்மிகு நகர நிறுவனம் மூலம் 660 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள அறிவுசார் போக்குவரத்து அமைப்புத் திட்டத்தினை தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் உருவாக்கி, இத்திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியையும் பெற்றுள்ளது.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், இதுவரை 1,925 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளதுடன், நீர் மின்திட்டங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வர்த்தக மையங்கள், சாலைகள் அமைத்தல், பேருந்துப் பணிமனைகளை நவீனமயமாக்கல், வாங்கும் திறனில் வீட்டுவசதி, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் மூலம் வரும் ஆண்டுகளில், 2,500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதற்கான உறுதி பெறப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சம் நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு இலட்சம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில், நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் மற்றும் சாலையோர திறன்மிகு வாகன நிறுத்தம் ஆகியவற்றை செயல்படுத்த ‘விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தை’, அரசு-தனியார் பங்களிப்பு முறையின் கீழ், 2,000 கோடி ரூபாய் செலவில் சென்னை நகரில் இந்த அரசு செயல்படுத்தும். தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியுதவியை அளிக்கும்.