தமிழகம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜினாமா.

சென்னை:-

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில்ரமானி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் முடிவு செய்து பரிந்துரை செய்தது. இதேபோல் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்திருந்தது.

பணிமாற்றம் செய்யும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கொலிஜியத்திற்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை கொலிஜியம் ஏற்கவில்லை. இதையடுத்து, அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ளார். அதன் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். ராஜினாமா செய்துள்ள தஹில்ரமானி வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.