சிறப்பு செய்திகள்

சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

சென்னை:-

கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தெற்கு நோக்கி செல்லும் புறநகர் பேருந்துகளுக்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் 44.74 ஏக்கர் நிலப்பரப்பில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய பேருந்து நிலையம், சுமார் 6,40,000 சதுர அடி கொண்ட கட்டுமானத்துடன் அமைக்கப்பட உள்ளது. இப்பேருந்து நிலையம், சுமார் 1,50,000 பயணிகள் பயன்பெறும் வகையிலும், 250 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்தக் கூடிய வகையிலும், 270 கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், எரிபொருள் நிரப்பும் நிலையம், புறக்காவல் நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின் நிலையம், தாய்ப்பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான ஓய்வறைகள், பயணிகளுக்கான காத்திருக்கும் அறை, பயணிகள் ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மைச் செயலாளர் / உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். சண்முகம், தமிழ்நாடு மின்னாளுமை முகமை ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் கே.மிஸ்ரா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.