விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? நாளை ராஜஸ்தான் ராயல்சுடன் மோதல்…

சென்னை:-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 7 ‘லீக்‘ ஆட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் என்பதால் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டமே இங்குதான் நடத்தப்பட்டது, கடந்த 23-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ‘லீக்‘ ஆட்டம் நாளை (31-ந்தேதி) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே சூப்பர் கிங்ஸ் சிறப்பாக ஆடி வருகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்திய அந்த அணி 2-வது ஆட்டத்தில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட்டில் தோற்கடித்தது.

நாளை ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை அணியின் பலமே கேப்டன் டோனிதான். கேப்டன் பதவியிலும், பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார். வாட்சன், பிராவோ, ஜடேஜா ஜோலிக்க கூடியவர்கள் பேட்டிங்கில் ரெய்னா, அம்பதிராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் இம்ரான்தாகீர், ஹர்பஜன்சிங் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

காயம் காரணமாக நிகிடி தென் ஆப்பிரிக்கா, மற்றும் சொந்த சூழ்நிலை காரணமாக டேவிட் வில்லி(இங்கிலாந்து) ஆகியோர் விலகி இருப்பது சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். முதல் 2 ஆட்டத்திலும் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே சூப்பர் கிங்ஸ் களம் இறக்கியது. நாளைய ஆட்டத்திலாவது டோனி மாற்றம் செய்து 4-வது வீரரை கொண்டு வருவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடியே தோற்றது. தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 14 ரன்னில் தோற்று நேற்றைய ஆட்டத்தில் 198 ரன் குவித்தும் ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது.

அந்த அணி ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டும். கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீல் சுமித் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.நாளைய போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இதனால் போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.