தமிழகம்

சென்னை தியாகராயநகரில் ஆளில்லா விமானம் மூலம் தீபாவளி திருடர்கள் கண்காணிப்பு

சென்னை:-

சென்னை தியாகராயநகரில் கூட்ட நெரிசலில் தீபாவளி திருடர்கள் கைவரிசை காட்டும் போது அவர்களை பிடிக்க ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் சென்னையில்தீபாவளி விற்பனை களை கட்டத் தொடங்கி விட்டது. புத்தாடைகள், பட்டாசுகள், நகைகள் வாங்குவதற்கு தி.நகர், புரசைவாக்கம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குடும்பத்துடன் மக்கள் குவிந்து வருகின்றனர்.

இதை பயன்படுத்தி திருட்டு மற்றும் நகைகள் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் சென்னை மாநகர காவல்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் தி.நகரின் முக்கிய வீதியான ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார், பனகல் பார்க், பர்க்கிட் சாலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மாம்பலம் காவல்நிலைய பகுதியில் ஏற்கனவே 192 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் 50 புதிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. ரங்கநாதன் தெருவிலும், பனகல் பூங்காவிலும் இரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 3 கேமராக்கள் பொருத்தப்பட்டு இந்த கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சுமார் 60 ஆயிரம் பேர் புகைப்படங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலீசாரின் தோள் பட்டையில் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.கூட்டத்தில் பொதுமக்களோடு நடந்து சென்று திருடர்களை கண்காணிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு கூட்டத்தை கண்காணிக்க ஆளில்லா கண்காணிப்பு விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த விமானம் பறக்க விடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

இதன் மூலம் கூட்ட நெரிசலை கண்காணித்து அதற்கேற்றாற்போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைக்க போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நெரிசலை பயன்படுத்தி திருடும் நபர்களை பிடிக்க காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த பணியில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.