தமிழகம்

சென்னை மாநகராட்சிக்கு “தூய்மை நகரம்” விருது…

சென்னை:-

மத்திய அரசின் “தூய்மை நகரம்” விருது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

மத்திய வீட்டு வசதித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைக்கான மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தூய்மை நகர விருது வழங்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை மாநகரம் 235-ஆவது இடத்தையும், 2018-ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 100-ஆவது இடத்தையும் பெற்றது.

திடக்கழிவு மேலாண்மை துறை, சாலைகள், தெருக்களில் தூய்மை ஆகியவற்றின் மூலம் சென்னை மாநகரம் 2019-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் நாடு அளவில் 61-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 3-ஆவது இடத்தையும் பெற்றது.
இதுதொடர்பாக டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங்கிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் (சுகாதாரம்) பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.