சிறப்பு செய்திகள்

சென்னை மாநகரில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கம் – முதலமைச்சர் தகவல்…

சென்னை:-

சென்னையில் தேர்தல் முடிந்த பின்னர் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலம் பொற்காலமாகும். இந்தியாவிலேயே கழகத்தை மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உருவாக்கி நாடாளுமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இடம் ெபற செய்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சேரும்.

அம்மா அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக உருவாக்கி அதை அமல்படுத்தினார். அவர் வழி நின்று செயல்படும் கழக அரசு அவரது திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. அம்மாவின் மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று ஜோதிடம் கூறினார்கள். முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் ஆட்சி கவிழ்ந்து விடும் என்றார்கள். அதன் பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்த பின்னர் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றார்கள்.

துரோகிகளும், விரோதிகளும் ஒன்றாக கைகோர்த்து அம்மாவின் ஆட்சியை கவிழ்க்க நினைத்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு இன்று உங்களுடைய நல் ஆசியோடும், ஆதரவோடும் இரண்டு ஆண்டுகளை கடந்த மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அம்மாவின் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1000 ரூபாய் வழங்கினோம். அதன் பிறகு இப்போது ஏழை தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெருக தலா ரூ.2000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தேன்.

ஏழைகளுக்கு நல்லது செய்யும் நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தை கொடுக்க விடாமல் செய்ய எதிர்க்கட்சி தலைவர் கட்சிக்காரர்களை தூண்டி விட்டு வழக்கு போட வைத்து தடுக்க திட்டம் போட்டார். ஆனால் நல்ல இதயத்தோடு இந்த அரசு வழங்கும் 2000 திட்டத்தை வழங்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. தேர்தல் வந்து விட்டதால் அதை வழங்க முடியாமல் போய் விட்டது. தேர்தல் முடிந்ததும் அந்த 2000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது பகுதி ரூ.29 ஆயிரம் கோடி செலவில் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக மத்திய அரசிடம் பாதி தொகையை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டிருக்கிறோம். தேர்தல் முடிந்ததும் மத்தியில் நல்லாட்சி அமைந்தவுடன் சென்ைன மாநகரின் இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். அது மட்டுமல்ல போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விரைவில் ஏற்கனவே அறிவித்தபடி மின்சார பேருந்துகள் சென்னை மாநகரில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி மதசார்பற்ற கூட்டணியாகும். சிலர் வேண்டுமென்றே மதத்தை புகுத்தி குளிர் காய பார்க்கிறார்கள். இந்த கூட்டணி மதசார்பற்ற கூட்டணி என்பதை மீண்டும் உறுதி பட தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்யும், உறுதுணையாக இருக்கும் கூட்டணியாகும். இந்த அரசும் சிறுபான்மை மக்களின் அரணாக திகழ்கிறது என்பதற்கு அடையாளம் தான் மத்திய சென்னையில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சாம்பால் ஆவார். அவரது வெற்றி சிறுபான்மையின மக்களுக்கு அளிக்கப்படும் உற்சாகமாகும். மேலும் மத்தியில் திடமான, பலமான ஆட்சி அமைவதற்கு சாம்பாலை மாம்பழ சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.