தமிழகம்

சென்னை மாநகர பகுதிகளில் சிவப்பு நிற பேருந்துகள் இயக்கம் – பயணிகள் உற்சாக வரவேற்பு…

சென்னை

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக இயக்கப்பட்டு வரும் சிவப்பு நிற பேருந்துகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கடந்த அக்டோபர் மாதம் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய சிவப்பு நிற பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. இந்தபேருந்துகள் சென்னை மாநகர பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பேருந்துகளில் 46 இருக்கைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகரில் 300 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இருக்கைகள் குறைவாக இருப்பதால் பயணிகள் வசதியாக காலை நீட்டி உட்காருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இதனால் முதியோர்கள் இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்கு பெரிதும் விரும்புகிறார்கள். அது மட்டுமல்லாது மூட்டு வலியால் அவதிப்படும் பயணிகள் இத்தகைய பேருந்துகளில் பயணம் செய்யும் போது காலை மடக்கி உட்காராமல் நீட்டி உட்கார வசதியாக உள்ளது. தென்சென்னையில் மட்டும் 65 சதவீத மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓ.எம்.ஆர். சாலை பகுதிகளில் இந்த பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன. ஏனென்றால் இப்பகுதியில் மின்சார ரயில்கள் இல்லாததால் பெரும்பாலான பயணிகள் தரமணியில் இருந்து சோழிங்கநல்லூர் வரை இந்த பேருந்துகளை நம்பியே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

அலுவலகம் செல்பவர்கள் அதிகம் பேர் இருப்பதால் இந்த பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள். பழைய பேருந்துகள் இயக்கப்பட்டபோது பெரும்பாலான பயணிகள் அதில் பயணம் செய்வதில்லை. காரணம் அதில் உள்ள வசதி குறைவுகள் தான். இப்பொழுது புதிய சிவப்பு நிற பேருந்துகள் பயணம் செய்வதற்கு வசதியாக இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாளைக்கு ரூ.11,500-லிருந்து ரூ.12 ஆயிரம் வரைவருமானம் கிடக்கிறது. பழைய பேருந்துகளில் வெறும் 1000 ரூபாய் மட்டுமே வசூலானது.

இதுபோன்ற வசதியான கண்கவர் பேருந்துகளை மாநகர் முழுவதும் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான பேருந்துகள் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இருப்பதால் குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் தான் பயணிகளை ஏற்றி செல்கின்றன. எனவே இதே மாதிரி பேருந்துகளை சாதாரண கட்டணத்தில் செல்வதற்கு வசதியாக இயக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள். இதை போக்குவரத்து கழகம் விரைவில் பரிசீலிக்கும் என்று அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.