சிறப்பு செய்திகள்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாயை கடலில் போட்டு வீணாக்கியது தி.மு.க. அரசு – துணை முதல்வர் குற்றச்சாட்டு…

சென்னை:-

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப் போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாயை கடலில் போட்டு வீணாக்கியது தி.மு.க. அரசு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இந்தியாவிலேயே பல வியத்தகு சமூக நலத்திட்டங்களை கொண்டு வந்து அமல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆனால் மத்திய ஆட்சியில் இடம் பெறாமலேயே பல திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேல் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. பதவிகளை பங்கு போட்டுக் கொண்டதே தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக சொல்லி பல ஆயிரம் கோடி வீணானது தான் மிச்சம். அத்திட்டம் சரி வராது என்று அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எச்சரித்தார்.

ஏனென்றால் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கடலில் கால்வாய்கள் எதுவும் இல்லை என்பதால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் பணியை தொடங்கும் போது மீண்டும், மீண்டும் மணல் குவிந்து விடும். அதனால் அது பயன் தராது என்று அப்போதே அம்மா அவர்கள் எச்சரித்தார். ஆனால் தி.மு.க. அடம் பிடித்து அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி பல ஆயிரம் கோடியை பாழடித்தது தான் மிச்சம். கடலில் போட்டார்களோ? அல்லது அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று தெரியவில்லை.

இப்படி உருப்படியில்லாத காரியங்களைத் தான் தி.மு.க. செய்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல முறை வலியுறுத்தினார்கள். ஆனால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அதை கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் நினைத்திருந்தால் ஒரே நாளில் அரசிதழில் இடம் பெற செய்திருக்க முடியும். அவர்கள் அதை செய்ய முன்வரவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நாட்டு மக்களை விட தங்கள் நலன்தான் முக்கியமாக கருதுபவர்கள். கொடுப்பதையே தட்டி பறிப்பவர்கள் அவர்கள். அவர்களிடம் நல்லதை எப்படி எதிர்பார்க்க முடியும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.