மதுரை

சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் – மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த கள்ளழகர்…

மதுரை:-

மதுரை சித்திரை திருவிழாவில்  காலை கள்ளழகர் சேஷவாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்திற்கு வந்தார். பின்னர் பிற்பகலில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அழகர்கோவில் சித்திரை திருவிழா கடந்த 15 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய உடன் தான் இல்லாமல் தங்கை மீனாட்சிக்கு திருமணம் நடந்தது ஏன் என அறிந்து கோபமடைந்து நகருக்குள் செல்லாமல் வைகை ஆற்றுக்கரை ஓரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்திற்கு சென்றார். அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து கள்ளழகரை வழிபட்டனர்.

அதன்பிறகு நேற்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தங்கினார். அக்கோவிலிருந்து  காலை 9 மணிக்கு சேஷவாகனத்தில் (7 தலை கொண்ட பாம்பு வாகனம்) தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். தேனூர் மண்டபத்திலிருந்து பிற்பகல் 2 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வைகை ஆற்புறப்பட்டுச் சென்றார். வைகை ஆற்றில் துர்வாச முனிவரால் தவளையாக சாபம் பெற்றுக் கிடக்கும் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். வைகை ஆற்றின் கரையோரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. ஒரு குழியில் வாழை மரமும், நாரையும் மற்றொரு குழியில் மண்டூக முனிவரின் சிறிய உருவச் சிலையும் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளழகர் தேனூர் மண்டபம் அருகே வைகை ஆற்றில் இறங்கியதும் ஒரு குழியில் இருந்த கல்நாரைக்கு முக்தி வழங்கி பறக்கவிடப்பட்டது. இன்னொரு குழியில் இருந்த மண்டூக முனிவர் சிலை மேலே உயர்த்தப்பட்டது. கள்ளழகரின் கால் வைகை ஆற்றில் பட்டதும் தவளையாக மாறிக் கிடப்பதாகக் கூறப்படும் மண்டூக முனிவர் சாபம் விமோசனம் பெற்றதற்கு அடையாளமாக முனிவரின் சிலையை உயர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வைகை ஆற்றில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்த்தனர். அழகர் மலையிலுள்ள நூபுர கங்கையில் சுதபஸ் என்ற மண்டூக முனிவர் அழகரை புகழ்பாடிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த துர்வாச முனிவர் தவளையாக போ என சாபமிட்டார். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெறுவதற்காக வைகை ஆற்றில் கருட வாகனத்தில் கள்ளழகர் இறங்கினார். என்பது வைணவ புராண வரலாறு ஆகும். மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்த பின்னர் கள்ளழகர் அனுமார் திருக்கோவிலில் எழுந்தருளினார். அங்கும் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து கள்ளழகரை வழிபட்டனர்.

மாலை அங்கிருந்து கிளம்பி ராமராயர் மண்டபத்திற்கும் மீண்டும் வந்தார். அங்கு நேற்று இரவு கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. காலை ராமராயர் மண்டபத்திலேயே மோகன அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் அழகர்கோவில் மலைக்கு கள்ளழகர் திரும்புகிறார்.