சிறப்பு செய்திகள்

சோதனைகளை கடந்து சாதனை படைப்போம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூளுரை…

கோவை:-

மத்திய, மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர பொள்ளாச்சி கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியங்களின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமை வகித்தார். கழக தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சோதனைகளை கடந்து தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி கழகத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கியுள்ளனர். அவர்களது வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். கழக அரசு சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பாக இருக்கும். பொள்ளாச்சி நாடாமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, அனைத்து சாலைகளும் சீரமைப்பு, உலகத்தரத்தில் பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலை, பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள் என எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

கழக அரசின் தீவிர முயற்சியால் ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களுக்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தென்னை விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் 11 முறைக்கு மேல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து கொப்பரை தேங்காய் விலை உயர்வை பெற்று தந்தவர்.

பொள்ளாச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய தனது 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக தந்தவர். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் வலிமையான ஆட்சி அமையவும், மத்திய, மாநில அரசின் மக்கள் திட்டங்கள் தொடரவும், கழக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த தேர்தலில் அம்மா வழியில் சோதனைகளை கடந்து நிச்சயம் சாதனை படைப்போம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, ஜி.கே.சுந்தரம், பேரூராட்சி செயலாளர்கள் கோட்டூர் பாலு, கோபால்துரை, ராஜேந்திரன், வி.பி.கணபதி, அண்ணா தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில்கணேசன், ஊராட்சி செயலாளர் மகாலிங்கம், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார், பனப்பட்டி தினகரன், மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.