திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை கோடை விழா நிறைவு – தோட்டக்கலைத்துறை அரங்கத்திற்கு முதல்பரிசு…

திருவண்ணாமலை:-

ஜவ்வாதுமலை கோடை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது சிறந்த அரங்கம் அமைத்ததற்காக தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசுக்கோப்பையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூர் சுற்றுச்சூழல் பூங்கா அருகில், வேலூர் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஜவ்வாதுமலை கோடை விழா துவங்கி நடைபெற்றது. இந்த விழாவை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி என்.நடராஜன், சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமையில் துவக்கி வைத்தனர்.

கோடை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது சிறந்த முறையில் அரங்கம் அமைத்ததற்காக தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசுக்கான கோப்பையை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் எல்.மைதிலி, அனைத்து துறை அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி பேசுகையில், இனி வரும் காலத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா நடத்துவதற்கு 15 முதல் 20 ஏக்கர் நிலம் அருகாமையில் தேர்வு செய்யப்பட்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா போல் அமைக்கப்பட்டு நிரந்தர இடத்தில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஜவ்வாதுமலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலையில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூரில் தகுதியுள்ள நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மாதிரி பள்ளிகள் உருவாக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட கொழு, கொழு குழந்தை போட்டி, படகு மற்றும் வாத்து பிடிக்கும் போட்டிஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகளும், நாய் கண்காட்சியில் பங்கேற்ற சிறந்த நாய்க்கு பரிசுக்கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அதன் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

மேலும் ஓட்டம், குண்டுஎறிதல், கயிறு இழுக்கும் போட்டி கபடி, கைப்பந்து, நீளம் தாண்டுதல், மினிமராத்தான் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு ரூ. 45,600 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சிறந்த கண்காட்சி அரங்குகளுக்கான முதல் பரிசு தோட்டக்கலைத் துறைக்கும், இரண்டாம் பரிசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கும், மூன்றாம் பரிசு நெடுஞ்சாலைத் துறைக்கும், சிறப்பு பரிசு வருவாய்த் துறைக்கும் வழங்கப்பட்டது.