தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைப்பு – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…

நாமக்கல்:-

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், நாமக்கல், மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டார். நாமக்கல்லில் நடந்த நேரு யுவகேந்திரா நிகழ்ச்சியில் 70 உறுப்பினர்களுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள், தையல் பயிற்சி முடித்த 50 பெண்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

மேலும், திருச்செங்கோட்டில் ஆவின் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், பால் விற்பனை அலுவலகம் மற்றும் 24 மணி நேர ஆவின் நவீன பாலகத்தை திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னதாக, எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் 11 இடங்களில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை தொடங்கியும், மன்னார்பாளையத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். பள்ளிபாளையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை திறந்தும், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை தொடங்கியும் வைத்தார்.

இதன் பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர், துணை முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். கூட்டணி பற்றி வாட்ஸ் அப், பத்திரிகையில் வருவது யூகம்தான். பட்ஜெட்டில் பயிர்க்கடன் பத்தாயிரம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மிக நல்ல அம்சங்கள் கொண்ட பட்ஜெட்டை அனைவரும் வரவேற்றுள்ளனர். அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டை ஸ்டாலின் குறை கூறியுள்ளார்.

என்.எல்.சி, மத்திய மின் தொகுப்புகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிலக்கரி, மின்சார கொள்முதல் உள்ளிட்ட செலவுகளுக்காக மின்சார வாரியம் அளிக்க வேண்டிய பாக்கி தொகை, கஜா புயலால் கால தாமதம் ஆகியுள்ளது. கஜா புயல் பாதிப்புகளால் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு மின் வாரியத்திற்கு செலவாகியுள்ளது. இதன் காரணமாக தான் பாக்கித் தொகைகளை செலுத்த கால தாமதம் ஆனது.

மின்சார வாரியம் பாக்கித் தொகைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.22 ஆயிரத்து 815 கோடி அளவிற்கு கடன் உள்ளது. உதய் மின் திட்டத்தில் மின்வாரியம் இணைந்து கொண்டதால், இந்த கடன் தொகையை மாநில அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு பாதிப்பில்லை. இதனால் மின் குறைபாடு, மின்வெட்டு ஏற்படாது.

மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து கொள்கை முடிவுகளின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். தற்போது பட்ஜெட் நடந்து கொண்டிருப்பதால் இதன்பிறகு முதலமைச்சரிடம் தேதி வாங்கி, அவர்களுக்கு கஜா புயல் சிறந்த பணிகளுக்காக பாராட்டு விழா நடத்தப்படும். டாஸ்மாக் மதுபானக்கடை படிப்படியாக குறைக்கப்படும். 2016-ம் ஆண்டு அம்மா அவர்கள் 500 கடைகளை குறைத்தார். தற்போது முதல்வர் மேலும் 500 கடைகளை குறைத்துள்ளார். மேலும் 500 கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 1500 கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது 5100 கடைகள் உள்ளன. படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.