தற்போதைய செய்திகள்

டி.எம்.எஸ் ஊரக நலப்பணிகள் இயக்கக 3 மாடி கட்டடம் ரூ.3.37 கோடியில் சீரமைப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்…

சென்னை

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக புனரமைக்கப்பட்ட 3 மாடி கட்டடம் மற்றும் பாலினத்தேர்வு தடை செய்யும் சட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கணினி மென்பொருள் செயலியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக கட்டடம் 1986-ல் கட்டி முடிக்கப்பட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 4 தளங்களுடன் இக்கட்டடம் திறக்கப்பட்டது. அதன் பின்பு கூடுதலாக 3 தளங்கள் கட்டப்பட்டு குடும்ப நலத்துறை, தொழிலாளர் ஈட்டுறுதி துறை ஆகியவை தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும், 2012-ல் 110 சட்டமன்ற விதியின் கீழ் அம்மா அவர்கள் அறிவித்தபடி மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்திற்கான அரசாணை இவ்வியக்ககத்தின் மூலம் பெறப்பட்டு இவ்வியக்ககம் 7 மாடி வரை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3.37 கோடி மதிப்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக புனரமைக்கப்பட்ட 3 மாடி கட்டடம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், PCPNDT Act, Organ Transplantation Act, CEmONC, NCD, Outsourcing Cell, DNB Cell, Quality Assurance Cell, Occupational Therapy Wing, Bio Medical Waste Management and Fire Safety Wing, Clinical Establishment Wing போன்றவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் அதற்கான நிர்வாகப் பணிகள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அவர்கள் பணியினை செய்வதற்கு ஏதுவாக கூடுதலாக இட வசதி செய்ய அவசியம் ஏற்பட்டதன் நிலையில், அதிகாரிகளும் அலுவலர்களும் பிற பணியாளர்களும் நல்ல சூழ்நிலையில் பணிகளை தொடர்ந்திட ஏதுவாக இக்கட்டடம் புனரமைக்கப்பட்டு தற்போது கட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெண் பாலின விகிதாச்சாரம் சமமாக இருப்பதற்காக பாலினத்தேர்வு தடை செய்யும் சட்டம் 1994 தீவிரமாக செயல்படுத்தும் நோக்கோடு இச்சட்டத்திற்காக கணினி மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி அனைத்து ஸ்கேன் கருவிகள் உள்ள மருத்துவ நிலையங்கள் இச்சட்டத்தின்கீழ் பதிவு பெறுதல் அவசியமாக்கப்பட்டு தமிழ்நாட்டில் 6835 ஸ்கேன் மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து ஸ்கேன் மருத்துவ நிலையங்கள் இச்சட்டத்தின்கீழ் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இச்சட்டம் கடுமையாக செயல்படுத்துவதன் காரணத்தால் தற்போது மாநிலத்தில் பாலின விகிதம் 943 ஆக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் இச்சட்டத்தினை கடுமையாக செயல்படுத்தியதன் காரணமாக மாவட்ட ஆட்சியருக்கு 2017-ஆம் வருடம் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் 17 வழக்குகள் தொடரப்பட்டுள்ளள. குறிப்பாக சேலம் மாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கருவின் பாலினத்தை அறிவித்த குற்றத்திற்காக 5 மருத்துவர்களும் இரண்டு போலி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவரின் மருத்துவ பதிவு இச்சட்டத்தின்படி பாலினம் அறிவித்த குற்றத்திற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையாமல் இருக்கவும் இச்சட்டத்தினை மீறும் மையங்கள் மற்றும் மருத்துவர்கள் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்கவுள்ள டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பெ.அமுதா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பொறுப்பேற்கவுள்ள டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு. கி.செந்தில்ராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.ருக்மணி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் மரு.குழந்தைசாமி. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (இ.எஸ்.ஐ) இயக்குநர் மரு.மோகனன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.