சிறப்பு செய்திகள்

டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவை துவக்கம் : பிரதமர்- முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்…

திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி சென்னை டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் திருப்பூரில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கின்றனர். திருப்பூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

திருப்பூர்:-

திருப்பூரில்  பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் பங்கேற்கும் விழாவில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பாம்பன் பாலம் ஆகியவற்றுக்கு நாளை அடிக்கல் நாட்டி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்கள். இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தின் முப்பெரும் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை பிற்பகல் திருப்பூர் வருகிறார். பிற்பகல் 2.35 மணிக்கு கோவை விமான நிலையம் வருகை தரும் பிரதமருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3 மணி அளவில் பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து சேருகிறார். பின்னர் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொண்டு திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ராமேஸ்வரம் பாம்பன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சிகளையொட்டி திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழா மேடைக்கு வந்தவுடன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல்வண்ணாரப்பேட்டை வரை உள்ள மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமரும், முதல்வரும் தொடங்கி வைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இவ்விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவை தலைவர் ப.தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் வருகையையொட்டி திருப்பூரிலும், விழா நடைபெறும் பெருமாநல்லூரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விழா மேடையை நேற்று  இரவே டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். மேலும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர் வருகை தரும் பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் வரும்போது திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் தெற்கு பகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. நடராஜன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருப்பூரில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கி வைக்கப்படும் அதே நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழா நடைபெற உள்ளது. இதற்காக ரயில் நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி மற்றும் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.