தற்போதைய செய்திகள்

டி.டி.வி.தினகரனின் சுயரூபம் வெட்டவெளிச்சமாகி விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை

புரட்சித்தலைவி அம்மாவையே குறை சொல்லும் டி.டி.வி.தினகரனின் சுயரூபம் வெட்ட வெளிச்சமாகி விட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டிடிவி தினகரன் பேச்சை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அம்மா மீது பக்தி கொண்ட தொண்டன் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்தேன். அம்மாவை குற்றம் சொல்லும் அளவுக்கு டிடிவி தினகரன் சென்றிருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியையே அம்மா கலைத்தார் என்று பேசுகிறார்.

அம்மா இல்லாத நிலையில் அம்மாவை குற்றம் சொல்கிறார் என்றால் அது அம்மாவுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். இதனை கழக தொண்டர்கள் நினைக்க வேண்டும். அமமுக தொண்டர்கள் நினைக்க வேண்டும். அவர்கள் உடம்பில் கழக ரத்தம் ஓடுகிறது என்றால் புரட்சித் தலைவர் மற்றும்அம்மாவை இழித்துப் பேசிய டிடிவி தினகரன் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

10 ஆண்டுகள் ஊரை விட்டு ஓடி தமிழ்நாட்டின் பக்கமே வராதவர் தினகரன். நாடாளுமன்றம் செல்லாமல் இருந்தவர். அவருக்கு எம்.பி. பதவியை அளித்தது தன்னுடைய வாழ்நாளில் செய்த தவறு எனக் கருதி வீட்டுப் பக்கமே அவரை அம்மா சேர்க்காமல் இருந்தார். அவருக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் அம்மாவையே குறை சொல்கிறார். இதுதான் தினகரனின் சுயரூபம். தற்போது சுயரூபம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.