தற்போதைய செய்திகள்

டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்…

சென்னை:-

கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் சரியாக விளக்கம் அளிக்காததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தை அனுகினார்கள். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றும், தாங்கள் கட்சி மாறவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களை நீக்கியது செல்லும் என்றும் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனால் மக்களவை தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதுமட்டுமல்லாது மேலும் 3 தொகுதிகள் பற்றிய வழக்கு நிலுவையில் இருந்ததால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை. இப்போது அந்த 3 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டதால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதோடு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமாகி விட்டதால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆக இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையே அறந்தாங்கி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைச்செல்வன், கள்ளக்குறிச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபு ஆகிய மூவரும் தினகரனுடன் சேர்ந்து அ.ம.மு.க. என்ற அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு கட்சி பணியாற்றினார்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆதாரங்களுடன் எடுத்து கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உங்களை ஏன்? பதவி நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அளிக்கின்ற விளக்கத்தை தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.