இந்தியா மற்றவை

டி.டி.வி.தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி:-

டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கைவிரித்து விட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அ.ம.மு.க பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.