இந்தியா மற்றவை

டெல்லி ஹோட்டலில் தீ விபத்து: 17 பேர் பலி…

டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. 4 அடுக்குகளையும், 40-க்கும் மேற்பட்ட அறைகளையும் கொண்ட இந்த ஹோட்டலில் 60-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டெல்லி தீயணைப்பு படை துணைத் தலைவர் சுனில் சவுத்ரி கூறுகையில்,

” தீவிபத்து குறித்து எங்களுக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தகவல் அளித்தார்கள். உடனடியாக இங்கு வந்து, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டுள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீவிபத்து முதலில் 4-வது மாடியில் ஏற்பட்டுள்ளது, அதன்பின் தீ மெல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டபோது, 60 பேர் வரை இருந்துள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இப்போதுவரை 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வாகனங்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏறக்குறைய தீயை அணைத்துவிட்டோம். தீவிபத்துக்கான காரணம் குறித்து இனி ஆய்வு செய்யப்படும். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதுகிறோம் ” எனத் தெரிவித்தார்.