தஞ்சை

தஞ்சை பெரியகோயிலில் உலக யோகா தின விழா…

தஞ்சாவூர்:-

தஞ்சாவூர் பெரியகோயிலில் உலக யோகா தின விழாவையொட்டி வியாழக்கிழமை யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில், நாட்டிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஜூன் 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒருவார காலம் யோகாவின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையிலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதன் அவசியத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் பெரியகோயிலில் சர்வதேச யோகா தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், 500-க்கும் அதிகமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி, இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனம், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், ஏழுப்பட்டி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, புதுப்பட்டி ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி, கண்டியூர் பயோ கேர் நர்சிங் கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
ஈஷா யோகா கல்யாண் குமார், பெவின் சந்தர் பயிற்சி அளித்தனர்.

விழாவில், இந்திய சுற்றுலா, சென்னை உதவி இயக்குநர் பாஸ்வான், சுற்றுலா தகவல் அலுவலர் ராஜ்குமார், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு, தஞ்சாவூர் பெரியகோயில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.