தமிழகம்

தடைகளை உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடுவோம் – கிருஷ்ணகிரியில் துணை முதல்வர் ஆவேச பேச்சு…

கிருஷ்ணகிரி:-

எதிர்க்கட்சிகள் எத்தனை தடைகள் போட்டாலும் அவற்றை உடைத்தெறிந்து வெற்றிவாகை சூடுவோம் என்று கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்காக பெற்று தந்து பணியாற்றுபவர். இத்தேர்தலில் வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசு திட்டங்களை போராடி பெற்றுத் தருவார். மக்களவைத் தேர்தலில் நல்லவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு மெகா வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம். ஆனால், காங்கிரஸ், திமுக மற்றும் சில உதிரிகட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர்.

காங்கிரஸ்- திமுக கூட்டணி ஏற்கனவே மத்தியில் ஆட்சி செய்த போது, திமுக சார்பில் 10 அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் மக்களுக்கான எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் காவேரி நடுவர் மன்றம் தீர்ப்பு வெளியானது. இதனை அரசிதழில் வெளியிட புரட்சித்தலைவி அம்மா திமுகவிற்கு கோரிக்கை விடுத்தும் வெளியிடவில்லை. மீண்டும் அம்மா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, 2011-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் சென்று போராடி காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார் புரட்சித்தலைவி அம்மா. தற்போது காங்கிரஸ் திமுக கூட்டணியினர் மெதுவாக சந்திக்க வருகின்றனர். அவர்களிடம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

திமுக ஆட்சியில் வன்முறை கலாச்சாரம், நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2016- ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தினமும் கலர் கலராக உடையணிந்து மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்தார். நடந்தார், கரும்புத் தோட்டத்தில் புகுந்தார், டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். தமிழகத்தை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீ வைத்து கொளுத்திவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீப்பந்தம் கையில் ஏந்தி சுற்றி வருகிறோமா. மாமன், மச்சான் சண்டையிலே, தினகரன் அலுவலகத்தில் தீ வைத்து கொளுத்தினார்கள். 3 உயிரிழப்புகள் ஏற்பட்டு, தற்போது நீதிமன்றம் தீர்ப்பில் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. இது தானே அவர்கள் வன்முறை கலாச்சாரம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்து வழங்க இருந்தோம். ஆனால் திமுகவினர் நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தடை பெற்றுள்ளனர். அந்த தடையை உடைத்தெறிந்து, அந்த தொகையை உறுதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் எத்தனை கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டாலும் அவர்களின் தடையை உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடுவோம். பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு பணம் கேட்ட கடைக்காரர்களை திமுகவினர் தாக்கினர். அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தும் நாங்கள் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் கே.பி.முனுசாமியை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.