திருவண்ணாமலை

தனியார் பள்ளி மாணவர்கள் 146 பேர் ஆரணி அரசு பள்ளியில் சேர்ப்பு – திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அதிகாரி வாழ்த்து…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளியில் படித்த 146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கண்ணப்பன் தெருவில் நகராட்சியின் அரசுப்பள்ளி 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இயங்கிவருகிறது. இவ்வாண்டு 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரையில் தணியார் பள்ளியில் பயின்ற 146 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பள்ளி மாணவர்களை வாழ்த்தினார்.

பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது ஆகையால் தான் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். தமிழக அரசு பள்ளிக் கல்விக்காக பல்வேறு நலதிட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருவதால், விலையில்லாத பாடபுத்தகம், விலையில்லா மடிகணினி வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்குவதாலும், அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளதாலும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாலும், அரசுபள்ளியில் மாணவர்கள் சேருகின்றனர். ஆரணி கண்ணப்பன் தெருவில் உள்ள இப்பள்ளியில் மட்டும் 146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவிலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர் இதற்கு காரணம் தமிழக அரசு பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக எடுத்த முயற்சிகள் அரசு செயல் படுத்தியுள்ள நலதிட்டங்கள், புதிய பாடதிட்டம், உயர்தரமான கல்வி என்ற நிலையில் தனியார் பள்ளி சேர்க்கை குறைந்து அரசுபள்ளிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளின் மேல் நம்பிக்கை வந்துள்ளது என்பதை காட்டுகிறது.

சில மாதங்களில் ஒவ்ெவாரு பள்ளியாக சென்று அரசுபள்ளி ஆசிரியர்கள் 5மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கவுள்ளோம், ஒவ்வொரு அலுவலர்களும் 500 முதல் 1000 வரையிலான தனியார் பள்ளி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் தனியார் பள்ளிகளை போல் அரசுபள்ளிகளிலும் துவக்கப்பட்டுள்ளது, ஆங்கில வழி பிரிவுகளும் அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது, ஆகையால் அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளில் நிர்வாகிகள் பள்ளியில் மாற்றுசான்றுகள் வழங்க மறுத்தால், மாணவர்களின் எமிஸ்நம்பர் தரமறுப்பது உள்ளிட்டவைகள் குறித்து பெற்றோர்கள் கவலைப் படாமல் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேருங்கள் சான்றுகள், எமிஸ்நம்பர் உள்ளிட்டவைகள் எங்களிடம் தான் உள்ளது.

இவ்வாறு முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்.

அப்போது உடன் ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சம்பத், பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.கே.ரத்தினகுமார், சிறு குறு வணிகர் சங்க தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.