தமிழகம்

தனி நபர் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்ல தடை இல்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி…

சென்னை:-

ரூ.50 ஆயிரம் வரை தனிநபர் எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமைச் செயலகத்தில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல்குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இன்று எனக்கு வந்தவுடன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம். பின்னர் இது மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு அளிக்கப்படும். 3 சட்டமன்றத் தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுவரை 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோக் குழுவினர் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் வீடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து நேற்று மட்டும் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 92 லட்சம் 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஊட்டியில் ரூ.73.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதுவரையில் மொத்தமாக 1 கோடி 87 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஊட்டியில் 73 லட்சம் ரூபாய் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல கடலூரில் 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகப்படியான பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் தகவல் தெரிவிக்க வங்கிகளுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ 10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் இதனை வருமானவரித்துறை ஆய்வு செய்து குழுவுக்கு அனுப்பும். தனிநபர் ரூ. 50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.

ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர வேட்பாளர் ரூ. 1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம். உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்ய 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.