ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு..

ராமேசுவரம்:-

ராமேசுவரம்,தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிவருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி எம்.ஆர். சத்திரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் மீன்கள் இறங்கு தளத்திற்கு மேல் சீறி எழுந்தன. வழக்கத்திற்கு மாறாக நேற்று சூறாவளி காற்று வீசியது. இதனால் மணல் புழுதியாக பறந்ததால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசியது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் சென்னைக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5.15 மணியளவில் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு வந்தது.அங்கிருந்து புறப்பட்டு பாம்பன் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் வந்த போது 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்ப செயல்படும் தானியங்கி சிக்னலில் சிக்னல் கிடைக்காததால் பாலத்தின் நுழைவு பகுதியிலேயே சிறிது நேரம் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

காற்றின் வேகம் சற்று குறைந்த பின்பு சுமார் 5 நிமிடம் தாமதமாக அந்த ரெயில் அங்கிருந்து கிளம்பியது. பாம்பன் ரெயில் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. பாலத்தை கடந்தபின் வழக்கமான வேகத்தில் ரெயில் சென்றது.