உலகச்செய்திகள்

தன் மீது குற்றம் சுமத்திய 2 பெண் எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்கினார் கனடா பிரதமர்…

ஒட்டாவா:-
கனடாவை சேர்ந்த பிரபல நிறுவனமான எஸ்.என்.சி. லாவ்லின், உலகின் தலைசிறந்த பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம் லிபியாவில் சில தொழில் ஒப்பந்தங்களை பெற அந்த நாட்டின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த ஊழல் வழக்கின் விசாரணையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடுவதாக அவரது சொந்த கட்சியை சேர்ந்த 2 பெண் எம்.பி.க்கள் புகார் கூறினர்.
ஜோடி வில்சன் மற்றும் ஜானே பில்போட் ஆகிய 2 எம்.பி.க்களும் ஜஸ்டின் ட்ரூடோ மீது கிரிமினல் குற்றம் சுமத்திய பிறகு, தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். விரைவில் அங்கு தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் ஜஸ்டின் ட்ரூடோ மீதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை குறைத்துள்ளது.
இந்த நிலையில், தன் மீது கிரிமினல் குற்றம் சாட்டிய ஜோடி வில்சன் மற்றும் ஜானே பில்போட் ஆகியோரை தன்னுடைய தாராளவாத கட்சியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக நீக்கினார். இந்த நடவடிக்கை அவரை மேலும் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்கிறது. ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களை வெளியே கொண்டு வந்த 2 உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கி பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார் என எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீர் கடுமையாக சாடினார்.