தமிழகம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சென்னை:-

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குன்னூர் அருகே இடி,மின்னலுடன் மழை பெய்ததால் மின்னல் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார். கடும் கோடை நிலவிய நேரத்தில் இதுபோன்று கனமழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.