மற்றவை

தமிழகத்தின் நீண்டகால இணை பிரியாத பங்குதாரர் உலக வங்கி – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

வாஷிங்டன்:-

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக வங்கியின் தலைமையகத்திற்கு வந்திருப்பதும், இங்கே உங்களை எல்லாம் சந்திப்பதும் எனக்கு பெருமை அளிக்கிறது. தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் உலக வங்கி பெரும் பங்காற்றி இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உலக வங்கிக்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திறமையான நிலைத்த திட்டமிடுதல் போன்றவற்றால் கல்வி, சுகாதாரம், உள் கட்டமைப்பு ஆகிய துறைகளில் சாதனை புரிந்து இந்தியாவிலேயே மிக முக்கியமான மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் இந்த நீண்ட நெடிய முன்னேற்றப் பாதையில் உலக வங்கி உறுதியான இணை பிரியாத பங்குதாரராக இருந்து வருகிறது. நகர்புற வளர்ச்சி,

சாலை போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை, வீட்டு வசதி போன்ற பல்வேறு துறைகளில் உலக வங்கியின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. தமிழ்நாடு நிலைத்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், நீர்வள நவீன மாக்கல் திட்டம், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், கடலோர பேரிடர் ஆபத்துகளை குறைக்கும் திட்டம், மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டம் என உலக வங்கியின் 6 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

25 ஆண்டுகளுக்கு பிறகு உலக வங்கி மீண்டும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் ஈடுபடும் வகையில் தற்போது தமிழ்நாடு நீடித்த நிலைத்த வீட்டு வசதி மற்றும் குடியிருப்புகள் திட்டத்தை உலக வங்கியுடன் இணைந்து தமிழக அரசு தயாரித்துக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன. வீட்டு வசதித்துறையில் மாநில அரசின் நோக்கங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும், குறைந்த விலையில் வீடுகள் கட்ட எதிர்காலத்தில் நிதி உதவி செய்வதற்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

ஆகவே சில துவக்க முதலீடுகளுடன் இந்த உதவி வளர்ச்சி கடனாக அளித்து தமிழகத்தின் நீடித்த நிலைத்த வளர்ச்சி திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். போக்குவரத்து மற்றும் குடிநீர் துறைகள் வளர்ச்சிக்கான சென்னை குடிநீர் பார்ட்னர் ஷிப் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக என்னிடம் தெரிவித்தனர். குடிநீர் மற்றும் மறுபயன்பாடு, நீர்பாதுகாப்பு, நகர் போக்குவரத்து இணைப்புகள் உள்ளடக்கிய பல்வேறு முக்கிய அம்சங்கள் அடிப்படையில் சென்னை மாநகரை நிர்வகிக்கும் விதத்தில் சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

உலக வங்கியும், தமிழக அரசும் பல்வேறு முறை இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. சென்னை மாநகரக்கு சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு உறுதி பூண்டிருக்கிறோம். இத்திட்டம் வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உலக வங்கிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.