தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாசை கேள்வி கேட்க ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது – அமைச்சர் பி.தங்கமணி பேச்சு…

நாமக்கல்:-

தமிழகத்தின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாசை கேள்வி கேட்க ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் கழக வேட்பாளர் அறிமுக கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

ஏழரைக் கோடி தமிழக மக்களின் பாதுகாவலராகவும் ஒன்றரை கோடி கழக தொண்டர்களின் இதய தெய்வமாக நம்மை பாதுகாத்த அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாசியுடனும் இன்றைய தினம் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கழக வேட்பாளர் டி.எல்.எஸ் (எ) ப.காளியப்பன் 20 ஆண்டு காலமாக நாமக்கல் மாவட்ட கழகத்தின் பொருளாளராகவும், எப்போதும் அம்மாவின் விசுவாசியாகவும் கழகம் பிளவுபட்ட பொழுது கூட இந்த இயக்கம் தான் உண்மையான இயக்கம் என்று தன்னை இங்கு நிலைநிறுத்திக் கொண்டு இன்று இந்த நிலையை பெற்றிருக்கிறார் என்று சொன்னால் இந்த இயக்கத்தில் தான் ஒரு சாமானியனும் இந்த நிலைக்கு வர முடியும் என்று நிரூபித்து உள்ளார்.

40 ஆண்டு காலமாக கழகத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். அன்றைய தினம் கூட்டணிகளின் தொகுதிகள் அறிவிக்கின்ற பொழுது பாமக வரவில்லை, தேமுதிக வரவில்லை என்று எப்படியாவது இந்த கூட்டணியில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் உண்மை நிலைமை என்னவென்று சொன்னால் எங்களிடத்தில் முதன்முதலாக தொகுதியை பிரித்து முதன்முதலாக கையெழுத்திட்டது பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிகவும் தான். நாங்கள் கையெழுத்து போட்டு விட்டோம், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அறிவித்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் கூறியுள்ளார்கள்.

இதையும் ஒரு அரசியல் ஆக்கப் பார்த்தார்கள். ஒரு சாமானியன் ஆட்சி நடத்துவதால் எப்படியாவது இவர்கள் மீது தவறான கருத்துக்களை மக்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொய் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள். டாக்டர் ராமதாஸ் எங்களிடம் கையெழுத்துப் போட்டுவிட்டு செல்கிறார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றார். ஸ்டாலின் முதல்வராவதற்கு தகுதியற்றவர் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். தமிழகத்திலேயே ஒரு மூத்த தலைவர் யார் என்று சொன்னால் அது டாக்டர் அய்யா தான்.

அடுத்த நாள் காலையிலேயே ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். டாக்டர் ராமதாசை பார்த்து ஸ்டாலின் கேட்கின்றார் சூடு இருக்கின்றதா சொரணை இருக்கிறதா வெட்கம் இருக்கிறதா மானம் இருக்கிறதா அரசியல் நாகரிகம் உள்ளதா நான் ஸ்டாலினிடம் கேட்கிறேன். டாக்டர் ராமதாசை பார்த்து கேள்வி கேட்க முதலில் உங்களுக்கு தகுதி உள்ளதா என்று சிந்தித்துப் பாருங்கள். ஸ்டாலின் தோல்வியின் விளிம்பிற்கு சென்றுவிட்டதற்கு இதுவே உதாரணம். ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர் என்பதை காட்டிவிட்டார்.

அதேபோல் தேமுதிக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரசியல் நாகரீகம் கருதாமல் துரைமுருகன் எங்களுடன் கூட்டணி பேச வந்தார்கள். நாங்கள் இல்லை என்றவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சென்றுவிட்டார்கள் என்று ஒரு தவறான கருத்தை பரப்பினார். ஆனால் கேப்டன் நமது கூட்டணி அண்ணா திமுகவுடன் தான் என்பதில் உறுதியாக இருந்தார். நமது வேட்பாளர் ஒரு எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் நீங்கள் கூப்பிடும் நேரத்திற்கு ஓடோடி வந்து உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வார் என்று நான் உறுதி கூறுகிறேன்.

இன்றைய தினம் அம்மாவுடைய தொண்டர்கள் தான் இந்த கட்சியையும் ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்திலே இருக்கின்றார்கள். கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு இருக்கின்றது நாம் சொல்கின்றோம். நாட்டினுடைய பிரதமராக மரியாதைக்குரிய மோடிஜி வரவேண்டும் என்று ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னால் வலிமையான தலைவர் வேண்டும். அந்த தலைமைக்காக வாக்களியுங்கள் என்று நாம் சொல்கின்றோம்.

திமுகவைப் பொறுத்தவரை ஸ்டாலினை தவிர அந்த கூட்டணியில் காங்கிரஸ் உட்பட யார் பிரதமர் என்று இதுவரை சொல்லவில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள். நாங்கள் தமிழகத்தின் உரிமையைக் கேட்டுப் பெறுவோம் என்று நாட்டிற்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒரு வலிமையான தலைவர் வேண்டும் அவர் மோடிஜி தான் என்று நாங்கள் கூறுகிறோம். அதற்காக தமிழகத்தின் உரிமையை பெற நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். திமுகவில் இருப்பவர்கள் யார் பிரதமர் என்று முதலில் சொல்லட்டும்.

இந்தியாவில் இதுவரை மூன்று முறை ஆட்சிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிஜேபி இல்லாத ஓர் அரசு 1989-ம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் நடைபெற்றது. ஒன்றரை ஆண்டு காலம் தான் இருந்தது அதற்குப் பின்னால் சந்திரசேகர் வந்தார் ஆறு மாத காலம் தான் அந்த ஆட்சி இருந்தது. 1996-ம் ஆண்டு தேவகவுடா வந்தார், பிறகு குஜ்ரால் வந்தார். சில காலம் தான் அந்த ஆட்சி இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்த முடியுமா? ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமென்றால் வலிமையான தலைமை வேண்டும் வலிமை இல்லாத தலைமை இருந்ததால் பொருளாதாரம் எவ்வாறு சீரழிந்தது என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். வலிமையான தலைவராக மோடிஜி இருக்கின்றார்.

அவருக்கு வாக்களியுங்கள் தமிழகத்தின் உரிமையை நாங்கள் கேட்டுப் பெற்றுத் தருவோம் என்று இரட்டை இலைக்கு நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம். காவேரி பிரச்சினை பற்றி கூற வேண்டும் என்று சொன்னால் அம்மா அவர்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்ததன் காரணத்தினால் தான் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக நடைபெற்ற காவேரி பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி அந்த காவிரி நீரின் உறுதியை அரசிதழில் வெளியிட போராடி வெற்றி பெற்றிருக்கின்றனர். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததால்தான் இந்த பணியை செய்ய முடிந்தது. ஆனால் திமுகவும், காங்கிரசும் பத்தாண்டுகாலம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். இந்த காவேரி பிரச்சினைக்காக திமுக ஏதாவது ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டார்கள் என்று கூறுங்கள். நாங்கள் இந்த நாட்டிற்கு உழைப்பவர்கள் திமுகவினர் இந்த நாட்டை சுரண்டுபவர்கள்.

பொங்கலுக்கு ரூபாய் 1000 கொடுத்ததை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றவர். ஆனால் இரண்டு நாட்களில் அதை முறியடித்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அதாவது 2 கோடியே 2 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்த ஆட்சி அம்மா அவர்களின் ஆட்சி. அதேபோல் இன்று பாரதப் பிரதமர் சிறு குறு விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்து அம்மா அவர்களின் பிறந்த நாள் அன்று பிரதமர் அந்தத் திட்டத்தை துவக்கி வைத்து முதல் கட்டமாக 2000 ரூபாயை வழங்கினார்.

அதேபோல முதலமைச்சரும் கடுமையான வறட்சி ஆக உள்ளது. ஏற்கனவே விவசாயத்திற்கு கொடுத்திருக்கின்றோம். அந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் கஷ்டப்படக்கூடாது பல்வேறு தொழில்கள் இல்லாத காரணத்தினால் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஆணையிட்டு முதலமைச்சர் துவக்கி வைத்து உள்ளார்

. இந்தத் தேர்தல் என்பது திமுகவை முடிக்கும் தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். திமுகவிற்கு ஒரு முடிவு கட்டும் தேர்தலாக இத்தேர்தல் அமையும் இப்போது ஒரு துரோகி புதிதாக உள்ளே வந்து கொண்டிருக்கின்றார். இந்த இயக்கத்தை எப்படியாவது அழிக்க வேண்டும் இந்த இயக்கத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என நினைத்து செயல்பட்டவர் அம்மா அவர்களால் சென்னைக்கு வரக்கூடாது என்று சொல்லி அம்மா அவர்களால் விரட்டி அடிக்கப்பட்டவர் இன்று அம்மாவின் பெயரை சொல்லிக்கொண்டு வாக்கு சேகரிக்க அன்த நபர் வந்து கொண்டிருக்கின்றார். அந்தக் கட்சியின் சார்பாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் அவர் நமது ஒன்றிய கழக செயலாளராக இருந்தார் அன்றைய தினம் அம்மா அவர்கள் நமது கழகத்தில் ஒரு வேட்பாளரை அறிவித்தார் அன்று அந்த துரோகியும் திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு நமது இயக்கத்துக்கு துரோகம் செய்த காரணத்தினால் அந்தத் தொகுதியை அன்று நாம் இழந்தோம். அன்றைய தினம் நமது மாவட்டத்தில் அந்தத் தொகுதி மட்டும் நமது கைவிட்டுப் போனது என்று சொன்னால் அந்த துரோகிகள் தான் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இனிமேல் அந்த துரோக கட்சிக்கு தமிழ்நாட்டிலேயே வேலை இல்லை என்கின்ற நிலைமையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தேர்தலில் திமுகவிற்கு டெபாசிட் காலியாக வேண்டும்.

துரோகி இனி தேர்தலில் நிற்க முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். நாம் எதிரியைவிட துரோகியை தான் நமது முதல் எதிரியாக பார்க்க வேண்டும். அம்மா யாரை வேண்டாம் என்று சொன்னார்களோ அவர்கள் இன்று மக்களை ஏமாற்ற வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் அம்மாவுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அம்மா அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் இந்த இயக்கத்தை காப்பாற்றி விட்டு சென்றுள்ளார்கள் அந்தத் தாய்க்கு நாம் செய்யும் ஒரே நன்றி கடன் இந்தத் தேர்தலில் துரோகிகளை காணாமல் போகச் செய்யவேண்டும். எதிரிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.