தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி…

சென்னை:-

தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர்,  பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படும்என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு ஏற்கனவே அறிவித்ததற்கேற்ப அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க இருக்கின்றன, மேலும் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சீருடைகள் வரும் 15-ந்தேதிக்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தரத்துடன் புதிய பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, உலகமே வியக்கும் வகையில் இந்த பாடத்திட்டங்கள் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஏழு மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 ஆகிய எட்டு வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, நாளை (3-ந்தேதி) சென்னையில் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இருமொழி கொள்கை என்ற லட்சியப் பயணம் தொடரும், மும்மொழிக் கொள்கை குறித்து முதல்வர் கடிதம் மூலம் மத்திய அரசுக்கு தமிழக அரசின் கொள்கை பற்றி தெரிவித்திருக்கிறார். ஆகவே இருமொழி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இருமொழி கொள்கை தொடரும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது கடிதத்தில் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.