தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் காலூன்ற முடியாது – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேச்சு…

வேலூர்:-

காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

வேலூர் மேற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாதனூர் ஒன்றியம் மாறாபட்டு ஊராட்சியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர்புலவர் இரா.ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வேலூர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர்கபில் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி,முனுசாமி பேசியதாவது:-

எந்த இயக்கத்திற்கும் இல்லாத சிறப்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட கழகம் என்ற பேரியக்கத்திற்கு உள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தனது பிறந்தநாளில் ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கழக நிர்வாகிகளுக்கு அறைகூவல் விடுவார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் வந்த அம்மா அவர்களும் பிறந்தநாளில் என்னை சந்திக்க வராதீர்கள். உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள் என்று கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுப்பார்.ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை படைத்தவர்கள் கழகத் தொண்டர்கள். வேறு எந்த இயக்கத்திலும் இத்தகைய மனிதநேயம் கிடையாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க ஒன்றரை கோடி தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும். நூறு ஆண்டுகளானாலும் கழகம் என்ற இயக்கம் தான் தமிழகத்தில் மக்கள் பணி செய்யும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொல்லி விட்டு மறைந்துள்ளார். அம்மா அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ அமைச்சர்களை நம்பியோ அவ்வாறு சொல்லவில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களைள் நம்பி தான் சொல்லி மறைந்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் கழகம் என்ற பேரியக்கத்தை மகத்தான வெற்றிபெற செய்து வெற்றிக்கனியை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த துரோக கும்பலை நாட்டை விட்டு விரட்ட இது சிறந்த தருணமாக விளங்குகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கழகம் என்ற பேரியக்கம் மகத்தான வெற்றிபெற்று துரோகிகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் அயராது பாடுபட்டு வரும் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை மகத்தான வெற்றிபெற செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெறும் வகையில் மக்கள் செல்வாக்கு உடைய சிறப்பான கூட்டணி அமைத்துள்ளோம்.

தமிழ்நாட்டை காப்பாற்ற கழகம் என்ற இயக்கத்தால் தான் தான் முடியும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கட்சிகளை தமிழக மக்கள் ஒதுக்கி விட்டார்கள். காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவிற்கு தேய்ந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் எந்த கூட்டணி அமைத்தாலும் நமக்கு கவலை இல்லை. நம்முடைய பக்கம் நியாயம் ,தர்மம் உள்ளது. அம்மாவின் அருள் ஆசியுடன், புதிய ஒளியோடு கழகத் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை இதயதெய்வம் அம்மாவின் ஆன்மாவிடம் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளால் ஏற்படும் இடையூறுகளை தாங்கிக் கொள்ள வேண்டும். வேலூர் மாவட்டம் என்றும் அம்மாவின் கோட்டையாக திகழ வேண்டும்.

இவ்வாறு கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் வழிபாடு மற்றும் சர்வமத பிரார்த்தனை செய்வது, அன்னதானம் வழங்குவது, ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை வழங்குவது எனவும்,வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் கழகம் வெற்றிவாகை சூட கூர்ந்த மதி நுட்பத்துடன் மாபெரும் மக்கள் செல்வாக்கு உடைய கூட்டணி வியூகம் அமைத்து களம் காண வழிவகை செய்த தலைமைக்கு நன்றி தெரிவிப்பது,

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அம்மா அவர்களின் நல்அரசு ரூபாய் இரண்டாயிரம் வழங்கி ஏழை எளியோரின் துயர் துடைக்கும் அரசு என்பதனை நிரூபித்துக் காட்டிய கழக அரசுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பது, தமிழர் திருநாளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரூபாய் வழங்கி விவசாயி பெருமக்களின் துயர்துடைத்த கழக அரசுக்கு பாராட்டையும் , நன்றியையும் தெரிவிப்பது,

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களை இரவு பகல் பாராது, கண் துஞ்சாது களப்பணி ஆற்றி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வெற்றிக்கனியை அம்மாவின் நினைவிடத்தில் சமர்ப்பிப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஆவின்தலைவர் த.வேலழகன், ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.ராஜா ரமேஷ், செல்வம், ஜோதி ராமலிங்க ராஜா, நாகராஜ், வெங்கடேசன், நகர செயலாளர்கள் என்.சீனிவாசன், எஸ்.பி.ஸ்ரீனிவாசன், டி.டி.குமார், எம்.மதியழகன், ஜே.கே.என்.பழனி, ஜி.சதாசிவம், பகுதி கழக செயலாளர்கள் குப்புசாமி, ஐ.பி.எல்.சுந்தரம், அன்வர்பாஷா, நாகு, பாண்டியன், பேரூராட்சி செயலாளர்கள் அருள்நாதன், ஞானசேகர் , உமாபதி, மற்றும் திரளான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.