தூத்துக்குடி

தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக கழகம் உயர்ந்து நிற்பதற்கு குறையாத கொள்கை பலமும், மக்கள் நலமும் தான் காரணம் – வைகைச்செல்வன் பேச்சு…

தூத்துக்குடி:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், கழக அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை முறியடித்தும், தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக கழகம் உயர்ந்து நிற்பதற்கு பெரிதும் காரணம், குறையாத கொள்கை பலமா? மறையாத மக்கள் நலமா என்ற தலைப்பில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் குறையாத கொள்கை பலமே! என்ற தலைப்பில் நெத்தியடி நாகையன், கோபி காளிதாஸ் ஆகியோரும், மறையாத மக்கள் நலமே! என்ற தலைப்பில் சங்கரதாஸ், குமரிபிரபாகரன் ஆகியோரும் பேசினார்கள்.

இப்பட்டிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும், கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்குழு பொறுப்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் நடுவராக பங்கேற்று பேசியதாவது:-

“திறமை, தைரியம் மற்றும் உழைப்பு ஆகிய மூன்றும் சேர்ந்து நிகழ்வதே அதிசயங்கள்” என்ற பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவி மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டில் இத்தலைமுறை மக்கள் மட்டும் அல்லாது, வருங்கால தலைமுறை மக்களும் சிறப்பாக வாழவும், தமிழகம் சிறந்த மாநிலமாக திகழவும் வேண்டும் என்று தொலைநோக்கோடு சிந்தித்து, அறிவியல் மாற்றங்களுக்கேற்ப திட்டங்களை வகுத்து, அந்த திட்டங்களை செயல்படுத்தி, வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதன் மூலம் உலகில் உள்ள ஏழு அதிசயங்களில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எட்டாவது அதிசயமாக உலகத் தலைவர்களால் பாராட்டப்படுகின்ற ஒப்பற்ற தலைவியாக, தமிழக மக்களுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமாக திகழ்ந்தவர் என்றால் அது மிகையாகாது.

தமிழக மக்கள் யாரிடத்திலும், எதற்காகவும் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதே புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியம். வாழ்க்கையை அதன் பாதையிலேயே சந்தித்து வருகிறேன். அரசியலில் எனக்காக ஒரு எதிர்காலத்தை நான் திட்டமிட்டது இல்லை. அரசியலுக்காக தயார்படுத்தி கொண்டதும் இல்லை. இப்படியெல்லாம் வரவேண்டும் என்று எப்போதும் நினைத்ததும் இல்லை. ஆனால் இந்தியாவுக்கான ஒரு லட்சியம் உள்ளது. உலகிலேயே இந்தியா ஒரு வலிமை மிக்க வல்லரசாக வரவேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வலிமையை கொண்டுவர தேசப்பற்று மிக்க உறுதியான தலைவர் பதவிக்கு வரவேண்டும். இதுதானே இந்நாட்டில் பிறந்த குடிமக்களுக்கும் உள்ள நினைவாக இருக்கக்கூடும். இவைதான் புரட்சித்தலைவி அம்மாவின் நாட்டுப்பற்றுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த நாட்டு மக்களும் புரட்சித்தலைவி அம்மாவின் தேசிய உணர்வை அறிந்து பாராட்டினர்.

வரும் காலங்களில் புரட்சித்தலைவி அம்மாவின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.
மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்பட்டு வருகின்ற காரணத்தினால்தான் தமிழக மக்கள், அம்மா அவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மீண்டும் ஒரு நல்லாட்சியை கொடுத்திருக்கிறார்கள். நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்களுக்காக என்றென்றும் உழைக்கும், அம்மாவின் கொள்கைகளை முழுமையாக கட்டிக்காத்து அம்மாவின் கனவுகளை நனவாக்கும் வகையில், மக்கள் நலனுக்காக தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, கொண்ட கொள்கையில், லட்சியப் பிடிப்பில் தடுமாறாது, தடம்மாறாது, சோர்ந்து போகாது எளிய தொண்டர்களாக ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண தொண்டனாக இருப்பவர்களும் தலைவராக முடியும் என்பதை உலக அரசியலுக்கு அடையாளம் காட்டியவர்கள் எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும். தமிழகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம், முதல்வர் ஆகலாம் என்கிற வாய்ப்பை வழங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே ஆகும். தமிழக மக்களின் நலன்களுக்காக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தாரோ, அதற்கு இணையாக கூடுதலாகவும் மக்கள் பணியை செய்து கொண்டிருக்கிறது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கழக அரசு.

மனித உடலின் நாடி நரம்பை போல தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவிப் பாய்ந்திருக்கும் இயக்கம், மக்கள் உதிரத்தோடு கலந்திருக்கிற இயக்கம் அ.தி.மு.க. என்கிற பேரியக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற மக்கள் சக்திமிக்க தலைவரால் தொடங்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, இன்று நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக, ஒரு தங்க கூடாரமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக கழகம் உயர்ந்து நிற்பதற்கு, குறையாத கொள்கை பலமும், மறையாத மக்கள் நலமும்தான் பெரிதும் காரணம்.

இவ்வாறு வைகைச்செல்வன் தெரிவித்தார்.