தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஆர்வம் – சட்டப்பேரவையில், அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தகவல்…

சென்னை:-

தகவல் தொழில் நுட்பவியல் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஆர்வமாக உள்ளனர் என்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அளித்த பதிலுரை வருமாறு:-

உலகம் முழுதும் பரவி வரும் தகவல் தொழில் நுட்பப் புரட்சியானது, சமுதாயத்தில் சரிசம வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அனைத்து சமூகத்தினரும், பிரிவினரும் பயன்படுத்திட வழிவகுக்கிறது. அந்த வகையில், பொதுமக்களுக்கான சேவைகளை உடனுக்குடன், நம்பகமான மற்றும் வெளிப்படையான முறையில் வழங்கிடும் வகையிலான தீர்வுகளை உருவாக்குவதும், அதனைச் செயல்படுத்துவதுமே நல்ஆளுமை எனப்படுகிறது. அவ்வகையில் மின்-ஆளுமை திட்டத்தினை வலுபடுத்தும் விதமாக மின்னாளுமை கொள்கையானது முதலமைச்சரால் 2.1.2018 நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. நல் ஆளுமையில் தமிழகம், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது.

தகவல் தொழில்நுட்பம், அதிக வேலைவாய்ப்பினை உருவாக்குவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கியும் குடிமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கி நேரத்தையும், ஆற்றலையும் சேமிப்பதன் மூலம், ஒவ்வொரு நாளையும் மிக வசதியானதாக திறம்பட மாற்றியுள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் கணக்கில் கொண்டு, தகவல் தொழில் நுட்பத் துறையின் உட்கட்டமைப்பினை வலுபடுத்தும் வண்ணம் முதலமைச்சரால் 10.09.2018 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மின்ஆளுமைப் பயன்பாட்டை உறுதி செய்யவும், தகவல் தொழில்நுட்பத் தொழிலில் தமிழக அரசுக்குத் துணை நிற்கவும் ஏதுவாக தகவல் தொழில் நுட்பவியல் துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்துறையின் முக்கிய நோக்கங்கள்இணையம் வாயிலாக அரசின் தகவல் மற்றும் பரிமாற்றம் சார்ந்த சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திலேயே அளித்தல், கிராம மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுமையில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக ஆக்குதல், தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை கணிசமாக உயர்த்துதல்,

குறைந்த கட்டணத்தில் நிறைந்த கேபிள் டிவி சேவைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அளித்தல், இணையம் வாயிலாக தமிழை கற்பித்தல் மற்றும் கணினித் தமிழை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லுதல், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வாயிலாக உயர்த்துதல்.இந்நோக்கங்களை நடைமுறைபடுத்தும் விதமாக தமிழ்நாடு மின்னணு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 21.3.1977 அன்று நிறுவப்பட்டது.

இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை உருவாக்குதல், தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு, தமிழ்நாடு மாநிலத் தரவு மையம், பேரிடர் மீட்பு மையம், அருகாமை பேரிடர் மீட்பு மையம், மின்னஞ்சல் தீர்வு, மேகக்கணினியம், தொழில் முனைவோர் மையங்களை ஏற்படுத்துதல், மடிகணினி வழங்குதல், இணையதளங்களை உருவாக்குதல், ஆதார் நிரந்தர பதிவு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களை அமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

அரசு பணியாளர்கள் நலன் காப்பதில் அம்மாவின் அரசிற்கு இணை அம்மாவின் அரசு தான். அவ்வகையில் ‘எல்காட்’ நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்காமல் இருந்த நிலையினை ஆராய்ந்து, இடர்பாடுகளை களைந்து, எல்காட் பணியாளர்களின் பணி விதிகளில் உரிய திருத்தம் மேற்கொண்டு பணியாளர்கள் அனைவரும் மகிழும் வண்ணம் உரிய பணியுயர்வு உரிய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு தொழில் கட்டமைப்புகளை வலுபடுத்துவதும் கணினி மென்பொருள், வன்பொருள் தொழில்களை மேம்படுத்துவதும், காலத்தின் கட்டாயம் என்பதை தமது தீர்க்க தரிசனத்தினால் அறிந்து கொண்டவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா. ஆகையினால் தகவல் தொழில் நுட்பத்துறைக்கென தனி கொள்கையை 19.09.2002ல் வெளியிட்டு, தமிழகத்தை தகவல் தொழில் நுட்பவியல் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழச் செய்தார். ஆகையினால் தகவல் தொழில்நுட்ப தொழில் சார்ந்த தொழில் முனைவோர் தங்கள் தொழிலை தமிழகத்தில் துவங்க முன் வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் துவங்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங்களில்), திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூர் ஆகிய 8 இடங்களில் மொத்தம் 1,321.61 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 934.46 ஏக்கர் நிலங்கள் போக, மீதமுள்ள 384.15 ஏக்கர் நிலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில் துவங்க வரும் தொழில் முனைவோர் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நவீன தொழில் நுட்பங்களை அரசு நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டுமென்ற தீர்க்க தரிசனத்தோடு காணொலி காட்சி என்ற
நவீன தொழில் நுட்பத்தினை 2003ம் ஆண்டிலே தொடங்கி வைத்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா. இதன் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான செலவினம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சிறு குறு தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர், தமது தொழிலில் நன் முறையில் காலுன்ற ஏதுவாக, அவர்களுக்கு உரிய பயிற்சியும், வழிகாட்டுதலையும் வழங்கும் பொருட்டு 90 இருக்கை வசதி கொண்ட தொழில் முனைவோர் மையம் ரூபாய் மூன்றரை கோடி செலவில் சென்னையிலும், மற்றொரு தொழில் முனைவோர் மையம் கோயம்புத்தூரில் 50 இருக்கை வசதியுடன் ரூபாய் 2.07 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த தொழில் முனைவோர் சென்னையில் தங்கள் தொழிலினை தொடங்குவதற்கு தேவையான இடவசதியை வழங்கும் நோக்கத்தோடு அம்மாவின் அரசு ரூ.83 கோடி செலவில் சென்னை சோழிங்கநல்லூரில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 9 மாடியுடன் கூடிய தகவல் தொழில் நுட்ப கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றன.