தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கழக ஆடசி அமைய ஒன்றுபட்டு உழைப்போம் – அமைச்சர் எம்.சி.சம்பத் சபதம்

கடலூர்

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமைய ஒன்றுபட்டு உழைப்போம் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் மத்திய மாவட்டம் கடலூர் தெற்கு, வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ரெட்டிச்சாவடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ.பக்கிரி தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இராம.பழனிசாமி வரவேற்றார். இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், கழக இலக்கிய அணி துணைசெயலாளர் இ.சி,சேகர், கவிஞர் பி.எம்.தேவசகாயம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஏழை, எளியோர் ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம். சலவைபெட்டி, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் அவர்கள் தமிழகத்தை பதினோரு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அம்மா தமிழகத்தை 16 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதற்குப்பின் நமது முதல்வர் அவர்கள் மூன்று ஆண்டுகள் முடித்து நான்கு ஆண்டாக ஆட்சி செய்கின்றார். கட்சி தொடங்கி 40 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சியாக தனித்தன்மையோடு கழகம் விளங்குகிறது தமிழகத்தின் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் 45 சதவீதம் டெல்டா மண்டலத்தில் தான் விளைகின்றது. அதனால் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார்.

வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த காவேரி பாதுகாப்பு மண்டலத்தின் மூலம் வேளாண் உற்பத்தி தமிழகத்தில் அதிகரிக்கும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்த அ.தி.முக வின் புகழ் 1000 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று பதிவில் இருக்கும். இதன்மூலம் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்திக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் எடப்பாடியார்.

தமிழகத்தில் தற்போது பட்ஜெட்டில் ரூ.34,000 கோடி பள்ளிக் கல்வித்துறைக்கு, ரூ.16,000 கோடி வேளாண்மைத் துறைக்கு, ரூ.20,000 கோடி சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று இருக்கின்றார். உலமாக்களுக்கு 1,500 ரூபாய் பென்ஷனை 3,000 ரூபாயாக உயர்த்திய பெருமை நமது முதலமைச்சருக்கு உண்டு. தமிழகத்தில் உள்ள தேவாலயங்களை புதுப்பிக்க வருடத்திற்கு ஒரு கோடி என்பதை இந்த ஆண்டு முதல் ரூ.5 கோடியாக உயர்த்தி உள்ளார்.

மசூதிகளை புதுப்பிக்க ஆண்டுக்கு 80 லட்சம் என்று இருந்ததை ரூ.5 கோடியாக பராமரிப்புச் செலவுக்கு உயர்த்தியுள்ளார். இஸ்லாம் பெருமக்களின் நோன்பு கஞ்சிக்கு 5000 மெட்ரிக் டன் அரிசியை இந்த அரசு இலவசமாக வழங்குகிறது ஹஜ் பயணிகள் புனித பயணம் செல்லும்போது அவர்களுக்கு விசா மற்றும் பல்வேறு நடைமுறை களுக்காக இரண்டு மூன்று நாள் சென்னையில் தங்க வேண்டியுள்ளது என்பதற்காக அவர்களுக்காக 15 கோடி ரூபாயில் தங்குமிடம் அமைத்துக் கொடுத்த அரசு நமது கழக அரசு தான்.

பெண்களுக்காகவே வாழ்ந்து மறைந்த அம்மா சொன்னதை இங்கே நினைவு கூர்கின்றேன். நான் பல்வேறு விருதுகளை திரைப்படத்துறையில் பெற்றுள்ளேன். பல உலக தலைவர்கள் என்னை பாராட்டுகிறார்கள், ஆட்சிக்காலத்தில் பல விருதுகளைப் பெற்று உள்ளேன். ஆனால் எனக்கு அதெல்லாம் பெருமை இல்லை. உலகத்தின் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் என்னை அன்போடு அம்மா என்று அழைப்பது மட்டும் தான் பெருமை என்று கூறி அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறினாரே அந்த தலைமை ஆண்ட கழகம் தமிழகத்தை தொடர்ந்து ஆள அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.