தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் – அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில்  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 600 நபர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கும் விலையில்லாமல் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு கோடியே 58 லட்சம் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் பெறக்கூடிய வழிவகையை தமிழக அரசு செய்துள்ளது. குறிப்பாக உயர் அறுவை சிகிச்சை 25-ல் இருந்து 35 லட்சம் வரையும் காப்பீடு திட்டத்தை பயன்படுத்தும் வழிவகை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. மேலும், 255 அரசு மருத்துவமனைகளிலும், 747 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த அட்டையை பயன்படுத்தி மருத்துவம் செய்து கொள்ளலாம்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் துரித நடவடிக்கையால் இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் கூடுதலாக பெற்றிருக்கிறோம். மேலும், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிக்காக விண்ணப்பித்துள்ளோம். மருத்துவத்துறை என்பது சேவைத்துறை. வெகு குறைந்த மருத்துவர்களை பணிமாறுதல் செய்தது தண்டனை அல்ல. பணியின்போது பணிசெய்ய தடுத்த மருத்துவர்களை மட்டுமே பணி மாறுதல் செய்துள்ளோம். பணி மாறுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்ற நிர்வாக செயல்பாடுகள்கள் தான்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி, முன்னாள் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒப்புதலை மத்திய அரசு ஒரே நாளில் வழங்கி வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.