தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…

சென்னை:-

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பொதுத் துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளின் விவாதங்கள் மீது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரை வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கட்டுப்பாட்டின் கீழ் பொதுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஓய்வு பெற்ற முப்படை வீரர்களின் மறுவாழ்விற்காகவும், மறு பணியமர்த்துதற்காகவும் எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியும், ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு புதுமெருகேற்றியும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

கொடிநாள் நிதி வசூலில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்வருடம் முதல், கொடிநாள் நிதிக்கு வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் 2018-19-ம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த
3 இராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இவ்வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கார்கில் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட்டது.

மேலும், இக்காலத்தில் உயிர்நீத்த துணை இராணுவத்தைச் (CRPF) சேர்ந்த 2 வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் கருணைத் தொகையாகவும், மேலும், அவர்தம் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இக்கருணைத் தொகை மட்டுமல்லாது, 2018-2019-ம் ஆண்டில் இதுவரை போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் வீரமரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்த 472 பேருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.1.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு மாதாந்திர நிதியுதவிகள், பணப் பயன்கள் மற்றும் கல்வி உதவித் தொகைக்காக 2018-2019-ம் ஆண்டில் ரூ.26.09 கோடி செலவிடப்பட்ட வகையில், 11,557 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பதை இப்பேரவைக்குத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக வாழத் தேவையான அனைத்து வசதிகளையும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் உதவியோடு, கல்வி, மருத்துவ வசதிகள் உட்பட தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்ட உதவிகளையும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கிட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டவாறு ஜுன் 2011 முதல் அவர்களுக்கு நீட்டித்து வழங்கப்படுகிறது.

பொதுவாக அகதிகள் பாதுகாப்பு முழுவதும் மத்திய அரசே மேற்கொள்ள வேண்டிய செலவினமாக இருந்தாலும் மாண்புமிகு அம்மாவின் அரசு ஆண்டுதோறும் இதற்கென ரூ.110 கோடி செலவிடுகிறது. இதில் மத்திய அரசிடமிருந்து ரூ.68.54 கோடி மட்டுமே மீளப்பெறப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி, 14.6.2016 அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாரதப் பிரதமரிடம் வலியுறுத்தினார். இதே கோரிக்கையை முதலமைச்சரும், பாரத பிரதமருக்கு 27.02.2017ல் வலியுறுத்தினார். மீண்டும் 2.1.2018 அன்று இந்திய அரசின் உள் துறைக்கு இதனை வலியுறுத்தி அம்மாவின் அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தொடர் நினைவூட்டுகள் மூலமும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 2010 முதல் 30 .6. 2019 வரை 7538 இலங்கை அகதிகள் தங்கள் சுயவிருப்பத்தின்பேரில் தாயகம் திரும்பியுள்ளனர்.

கடல் கடந்து அங்கே இடர்பட்டுத் தவிக்கும் வெளிநாட்டு வாழ் தமிழர்களைத் தக்க நேரத்தில் தலையிட்டுக் காக்கும் பணியை பொதுத் துறை மேற்கொண்டு வருகிறது.இவ்வாண்டு மலேசியாவில் மே 12 முதல் 19 வரை நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற சென்னை, ஆவடியைச் சேர்ந்த மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அம்மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட 29 நபர்கள் நிதியின்மை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் பெறப்பட்டது.

இந்த தகவல் கிடைத்த மறு கணமே, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கான இருப்பிட வசதி, உணவு மற்றும் சென்னை திரும்ப விமான பயணச் சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியதன் காரணமாக, மேற்கண்ட 29 நபர்களும் 23.5.19 அன்று பாதுகாப்பாக சென்னை திரும்பினர்.
அதே போல 2018-19 ஆம் ஆண்டில், ஈரான், மலேசியா, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளில் தவித்துக்கொண்டிருந்த 91 தமிழர்களை அரசு செலவில், மீட்டு, சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசு கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்த தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட 221 நபர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது என்பதை               இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக புரிந்த தியாகத்தைப் போற்றி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை கடந்த 15.08.2018 முதல் ரூ.15,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியத் தொகையை ரூ.7500/- ஆகவும் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஆணையிட்டவாறு அம்மாவின் அரசு உயர்த்தி வழங்கி வருகிறது.

மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித் தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித் தோன்றல்கள் மற்றும் நாட்டிற்காக தியாகம் புரிந்த விடுதலைப் போராட்ட முன்னோடிகளின் வழித் தோன்றல்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.7500 சிறப்பு ஓய்வூதியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.