தமிழகத்தில் 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள்…

சென்னை
தமிழகத்தில் 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட இருப்பதாக பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மீனவர்களின் நலனைப் பேணவும், தமிழ்நாட்டில் மீனளத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும் வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 170.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாக் விரிகுடா பகுதியில் 2,000 இழுவலை மீன்பிடிப் படகுகளை 1,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து உரிய மாற்றம் செய்வதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, 500 இழுவலைப் படகுகளை, தூண்டில் மற்றும் செவுள்வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளாக மாற்றிட மொத்தம் 286 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் மற்றும் குந்துக்கல் ஆகிய இடங்களில் 185 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் 148 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மூக்கையூர் மற்றும் பூம்புகார் துறைமுகங்களில் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. குந்துக்கல் மீன்பிடி துறைமுகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இது தவிர 420 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்கும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.ஓகி புயலுக்குப் பின்னர், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் படகுகளிலிருந்து கடலோர பகுதிகளைத் தொடர்பு கொள்ளும் வசதிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த அரசு எடுத்துள்ளது.
சீரான தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ், 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதிகளில், 18 உயர்மட்டக் கோபுரங்களும், கடற்கரை சார்ந்த உபகரணங்கள் கொண்ட 18 கட்டுப்பாட்டு அறைகளும், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு 5 வாட் கம்பியில்லா கையடக்கக் கருவிகளும், மீன்பிடி விசைப்படகுகளுக்கு 25 வாட் கம்பியில்லா கையடக்கக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 1,600 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, 500 மீன்பிடி விசைப்படகுகளுக்கு பரிசோதனை முறையில் பொருத்தப்பட்டுள்ள ‘டிரான்ஸ்பாண்டர்கள் உதவியுடன் ஆபத்துக் காலங்களில் 200 கடல்மைல் தூரம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள இந்த மீன்பிடி விசைப்படகுகளை கண்காணிக்க இயலும். வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும். 2019-2020-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீனளத் துறைக்காக 927.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.