தமிழகம் முக்கிய நிகழ்வுகள்

தமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..

சென்னை

தமிழகத்துக்கு 7 ந் தேதி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்கள் பீதியடைய தேவையில்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகம், மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவ மழை முடிவுக்கு வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 7-ந்தேதி பலத்த கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்தும் கூடுதல் தலைமை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா வானிலை ஆய்வு மையம் மழை குறித்து முன்னெச்சரிக்கையை அளிக்கும் போது சில கலர்களை பயன்படுத்துவர். அதன்படி பச்சை கலரில் இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. நீல நிறத்தில் இருந்தால் பாதுகாப்பு- நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரஞ்சு கலரில் இருந்தால் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவப்பு கலரில் இருந்தால், அவர்கள் அளிக்கும் வரை படத்தில் எந்தப் பகுதியில் சிவப்பு கலர் இடம் பெற்றுள்ளதோ அந்தப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அர்த்தம்.

ரெட் அலர்ட் என்பது தற்பொழுது பயன்படுத்த வேண்டியதில்லை. இதனால் பொதுமக்கள் பீதியடைய கூடிய நிலை ஏற்படும். வரும் 7-ந் தேதி அதுபோன்ற நிலை எதுவும் இல்லை. 7-ந் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் கனமழையும், மிக கனமழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ரெட் அலர்ட் என்பது 24.5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பது அர்த்தம். அது தமிழகம் முழுவதும் பெய்யும் என கூறப்படவில்லை. சில பகுதிகளில் மட்டும் பெய்யும். ஆனாலும் தமிழகம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வருவதற்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

தமிழக அரசின் அறிவுரையின் அடிப்படையில் அனைத்து மாவட்டஆட்சித்தலைவர்களும் தயார் நிலையில் இருக்க அறிவு றுத்தப்பட்டுள்ளனர். எந்த பகுதியில் மழை பெய்யும் போது பாதிப்பு இருக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே கண்டுபிடித்து தெரிந்து வைத்துள்ளோம். வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கருத்தாய்வு செய்யப்பட்டுள்ளன, இதன்படி பாதிக்கப் படக்கூடிய பகுதிகள் என 4,399 இடங்களை அறிந்துள்ளோம். அதில் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய 578 இடங்கள் என்றும், அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 892 என்றும், மிதமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 1206 என்றும், குறைவாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 1723 என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகமாக பாதிக்கப்பட கூடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். இந்த மழைகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக தமிழக பேரிடர் மேலாண்மை மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 1275 காவலர் களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் 80 பேரும், பிற மாவட்டங்களில் 60பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்தத்த மாவட்டத்தில் தான் பணியில் இருக்கின்றனர். அவர்கள் அந்த மாவட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு மொழி எளிதில் தெரியும். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவின் உதவியையும் நாங்கள் நாடுவதற்கு தயாராக உள்ளோம்.

மேலும் 692 பல்துறை மண்டல குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. இதில் துணை ஆட்சியர் தலைமையில் இயங்கும். இந்த குழுக்கள் 6-ந் தேதியே பாதிக்கப்பட கூடிய பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவார்கள். 30 ஆயிரத்து 759 முதல் நிலை மீட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 500 பெண்கள் உள்ளனர். இந்த முதல் நிலை மீட்பாளர்கள் 7-ந் தேதி பிரச்சினை இருந்தால் அவர்கள் ஒருங்கிணைந்து அந்தப் பகுதியை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக கொண்டு வருவ தற்கு உதவியாக இருப்பார்கள். இதனால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்த மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் அளவினை பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் நிரம்பிய உடன் வேறு வழியில் திறந்து விடுவதற்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை ப்படி வண்டல்மண் தூர் வாருதல் பணிகள் அடிப்படையில் 30 ஆயிரத்து 46 குளங்களில் வண்டல் மண் தூர்வாரப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 608 குளங்களிலும் 2018 ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 438 குளங்களிலும் வண்டல் மண் தூர் வாரப்பட்டுள்ளன. கிட்டதடதட்ட 7 கோடியே 10 லட்சத்து 89 ஆயிரத்து 285 கன மீட்டர் வண்டல் மண் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த வண்டல் மண்ணைப் பெற்று 6 லட்சத்து 35 ஆயிரத்து 77 பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அளிப்பது குறித்து அந்தத்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அங்குள்ள நிலவரத்தை பொறுத்து முடிவு எடுத்து விடுமுறை அளிக்கலாம். கடலுக்குள் சென்ற மீனவர்கள் மீண்டும் கரை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.