மதுரை

தமிழகத்துக்கு அடுக்கடுக்கான துரோகம் செய்தது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கடும்தாக்கு…

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பிரச்சாரம் செய்தார்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியைச் சார்ந்த சிலைமான், விரகனூர், புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் இந்த பிரச்சாரத்தில் மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், கழக எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணைச்செயலாளர் கோ.பாரி, அவனியாபுரம் பகுதி கழக செயலாளர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது :-

அம்மா அவர்களின் அருளாசியோடு, முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. ஆனால் எதிரணியில் இருக்கும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியோ மக்கள் விரோத கூட்டணி. அந்த கூட்டணி தான் தமிழகத்திற்கு அடுக்கடுக்கான துரோகங்களை செய்தனர். முல்லைபெரியாறு ஆகட்டும், காவிரி பிரச்சனை ஆகட்டும், இது போன்ற ஜீவாதார உரிமைகளில் ஒரு துரும்பு அளவு கூட மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

ஆனால் இன்றைக்கு தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை மீட்டுக் கொடுத்தது அம்மாவின் அரசு. அது மட்டுமல்லாது இன்றைக்கு மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் பெற்றுத்தந்து வருகிறார். இதே திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து உங்களுக்கு கிடைத்திடும் வண்ணம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் அழகர்சாமிக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா பேசினார்.