சிறப்பு செய்திகள்

தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக கூட்டணியை விரட்டியடிப்போம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்…

கோவை:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் ஒன்றியம், குனியமுத்தூர் பகுதிகளில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கழக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டிக்காரனூர், குப்பே பாளையம, முத்திப்பாளையம், கெம்பனூர், தாளியூர், புதுப்பாளையம், தீனம் பாளையம், பூச்சியூர், குரும்பபாளையம், வேடபட்டி, நம்பியழகன் பாளையம், ஆண்டி பாளையம், நாகராஜபுரம், பேரூர் மற்றும் குனியமுத்தூர் பகுதி பேரூர் செட்டிபாளையம் சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர், குளத்துப்பாளையம் சுகுணாபுரம், பிகே.புதூர், இடையர்பாளையம், ஞானபுரம், ஜே.ஜே நகர், ரைஸ் மில் ரோடு, மாரியம்மன் கோயில் வீதி, வெற்றிலைக் கார வீதி, திருவள்ளுவர் நகர், திருமூர்த்தி நகர், குனியமுத்தூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கழக வேட்பாளர் மகேந்திரனுக்கு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அமைச்சர் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர நிலையான, வலிமையான ஆட்சி தேவை. ஆகவே இந்த மாபெரும் மெகா கூட்டணியை அமைத்துள்ளோம்.நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கோதாவரி காவிரி இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும். சிறு குறு விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் வரையிலான வட்டியில்லா பயிர்க்கடன் என எண்ணற்ற வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. ஆகவே மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெளிவாக அறிவிக்க முடியாமல் தி.மு.க கூட்டணி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. தமிழகத்திற்கு உலக அளவில் 2 ஜி, ஈழத்தமிழர் படுகொலை மூலம் தலைகுனிவை தி.மு.க – காங்கிரஸ் கட்சியினர் ஏற்படுத்தியுள்ளனர்.ஊழலில் ஊறிப்போன தி.மு.க பரப்பும் அவதூறு பிரச்சாரங்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். தலைவனாக இருக்க தகுதியில்லாதவர் ஸ்டாலின். மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு என்ன திட்டம் கொண்டு வந்தது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடைபெறும் கழக ஆட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம், அரசு கலைக்கல்லூரி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், குனியமுத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப்பணிகள், பாலக்காடு சாலை நான்கு வழி சாலையாக மாற்றம் , பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆனைமலை தனி தாலுகாவாக அறிவிப்பு, அனைத்து குளங்களும் சீரமைப்பு, விமான நிலைய விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மெட்ரோ ரயில் ஆய்வு, லட்சுமி மில்ஸ் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், அவிநாசி அத்திக்கடவு திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது மட்டுமன்றி அனைத்து பகுதிகளிலும் சிறந்த சாலை வசதி, இருட்டுப்பள்ளம், புட்டுவிக்கி, மாதம்பட்டி சாலை, நரசிபுரம் சாலை, சுகுணாபுரம் சாலை ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு -அவினாசி திட்டத்தில் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதி மற்றும் மதுக்கரை வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச்சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றை சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

குறுகிய சாலையாக இருந்த கோவை சிறுவாணி காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரை ரூ.18 கோடி நிதியை பெற்று தார்சாலை அகலப்படுத்தும் பணிக்கு கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பெரும் உதவியாக இருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் மத்திய அரசிடமிருந்து 5000 கோடிக்கு மேல் நிதியினை பெற்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.தென்னை விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர். கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க 5 ஏக்கர் நிலம் இலவசமாக தந்தவர். ஆகவே கழக வேட்பாளர் சி. மகேந்திரன் அவர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்வோம். திமுக காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது ஒன்றியச் செயலாளர் டிஎஸ்.ரங்கராஜ், கழக நிர்வாகிகள் என்.கே. செல்வதுரை, என்.எஸ். கருப்புசாமி,விஜயகுமார், சந்திரசேகர் ,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி, பகுதி செயலாளர் ஆர்.குலசேகரன், பகுதி துணைச்செயலாளர் எஸ்.எம்.உசேன், வேடபட்டி கிருஷ்ணராஜ், மாணவரணி கருப்பசாமி, அசோக்குமார் ,ஆர்.சசிகுமார், மற்றும் வார்டு செயலாளர்கள் ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.