சிறப்பு செய்திகள்

தமிழகத்துக்கு மேலும் 500 புதிய பேருந்துகள் : முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 132 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள், கோட்டங்கள் கட்டுதல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை – மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 160 பேருந்துகளும், என மொத்தம் 132 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிருவாக இயக்குநர் வி.பாஸ்கரன், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.