தற்போதைய செய்திகள்

தமிழகத்தை சீரழித்தது யார்? ஸ்டாலினுக்கு விந்தியா அடுக்கடுக்கான கேள்வி…

மதுரை:-

தமிழகத்தை சீரழித்தது தி.மு.க. தான் என்று தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து வில்லாபுரம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது நடிகை விந்தியா பேசியதாவது:-

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி எப்படி வைகுண்டம் போவான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்திலேயே செல்லாக் காசாக இருக்கும் ஸ்டாலின் எப்படி பிரதமர் வேட்பாளரை முன்மொழிவார். இந்த ஆட்சியை பற்றி ஊழல் என்று ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்ட ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், வீராணம் திட்ட ஊழல் என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்துள்ளனர்.

கருணாநிதி இருந்தபோது ஸ்டாலின் செயல்தலைவராக இருந்தார். தற்போது செயல் போய் செயல்படாத தலைவராக உள்ளார். அது மட்டுமல்லாது ஸ்டாலின் நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூற வேண்டும், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது யார்? நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? ஜல்லிக்கட்டுக்கு தடையை கொண்டு வந்தது யார்? தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்கு தீவைத்து 3 அப்பாவிகளை கொன்றது யார், சாதிக்பாட்ஷா தற்கொலை செய்து கொண்டது ஏன்? தமிழகத்திற்கு மதுவை கொண்டு வந்தது உங்கள் தந்தை தானே? இதற்கெல்லாம் நீங்கள் பதில் கூற வேண்டும். ஏனென்றால் தமிழகத்தை சீரழித்தது திமுக தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஸ்டாலினை ஒரு தலைவராக மக்கள் பார்ப்பது கிடையாது. ஏனென்றால் எந்த கூட்டத்திற்கு சென்றாலும் ஒரு காமெடியராக பேசி வருகிறார். அதனால் தான் கருணாநிதி உயிருடன் இருக்கும் போது முதலமைச்சர் பதவி எனக்கு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டதற்கு அதற்கு நீ சரிப்பட்டு வரமாட்டாய் என்று கருணாநிதியே கூறியுள்ளார். உலகத்திலேயே அதிகமாக பொய்களை பரப்பி வருவது சன் டிவியும், டிடிவியும் ஆகும். தேர்தலுக்கு டோக்கன் வழங்கி தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுத்தது டி.டி.வி.தினகரன் ஆவார். அம்மாவின் வீட்டு பக்கமே வரக்கூடாது என்பவரை எப்படி நாம் கட்சிக்குள் அனுமதிக்க முடியும்.

பொள்ளாச்சி விவகாரத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார். இதே நயன்தாரா விஷயத்திலும், நடிகை குஷ்பு திமுகவினரால் தாக்கப்பட்ட போதும், பிரபாகரனின் தாயாரை கருணாநிதி மருத்துவ கிசிச்சைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்ட போதும், இந்திராகாந்தி தாக்கப்பட்ட போதும் ஊர் உலகமே திமுகவைத்தான் குற்றம் சாட்டியது. ஏனென்றால் திமுக எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியாக இருந்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.